தூத்துக்குடி மாவட்டத்தில் 524 பள்ளிக்கூடங்களில் காலை உணவு திட்டம் தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 524 பள்ளிக்கூடங்களில் காலை உணவு திட்டத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 524 அரசு மற்றும் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளிக்கூடங்களில் காலை உணவு திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா தூத்துக்குடி அருகே உள்ள சோரீஸ்புரம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நேற்று காலையில் கிச்சடி, கேசரி வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறிய கனிமொழி எம்.பி., மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். இந்த திட்டத்தின் மூலம் 524 பள்ளிக்கூடங்களில் படித்து வரும் 18 ஆயிரத்து 819 மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர்.
விழாவில் தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) பிரபு, மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் வீர புத்திரன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமாரசாமி, மாவட்ட உணவு வழங்கல் அலுவலர் அபுல்காசிம், அய்யனடைப்பு பஞ்சாயத்து தலைவர் அதிர்ஷ்டகணபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன் பொன்மணி, வசந்தா, தாசில்தார் பிரபாகரன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் பாலின் ஜெபா, சுதாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.