காலை சிற்றுண்டி திட்டம் - உணவு பட்டியல் மாற்றியமைப்பு
'முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு திட்டத்திற்கு புதிய உணவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக முதல்கட்டமாக தமிழ்நாடு அரசு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியாக உப்புமா, கோதுமை ரவா, வெண்பொங்கல், கிச்சடி உள்ளிட்டவை வழங்கபடுகின்றன.
இந்நிலையில், 'முதல்-அமைச்சர் காலை சிற்றுண்டி திட்டம்' கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்திற்கு புதிய உணவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி திங்கட்கிழமை ரவா உப்புமா / சேமியா உப்புமா/ அரிசி உப்புமா/ கோதுமை ரவை உப்புமா வழங்கப்பட உள்ளது.
செவ்வாய்க்கிழமை ரவா காய்கறி கிச்சடி/ சேமியா காய்கறி கிச்சடி/ சோள காய்கறி கிச்சடி/ கோதுமை ரவை கிச்சடி ஆகியவை வழங்கப்பட உள்ளது.
புதன்கிழமை, காய்கறி சம்பாருடன் கூடிய ரவா பொங்கல்/ வெண் பொங்கல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை, காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா உப்புமா / அரிசி உப்புமா/ ரவா உப்புமா /கோதுமை உப்புமா ஆகியவை வழங்கப்பட உள்ளது.
வெள்ளிக்கிழமை சேமியா காய்கறி கிச்சடி/ சோள காய்கறி கிச்சடி, ரவா காய்கறி கிச்சடி/ கோதுமை ரவை கிச்சடி ஆகியவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாணவ/மாணவிக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி / ரவை / கோதுமை ரவை / சேமியா. உள்ளூரில் / அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்கள் / சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் மற்றும் உள்ளூரில் கிடைக்கக் கூடிய காய்கறிகள் (சமைத்த பின் 150 - 200 கிராம் உணவு மற்றும் 100.மி.கி காய்கறியுடன் கூடிய சாம்பார்) ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக் சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.