சி.என்.பாளையம், பட்டூர் பள்ளிகளில் காலை உணவு திட்டம்: அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் தொடங்கி வைத்தனர்
சி.என்.பாளையம் மற்றும் பட்டூர் கிராமத்தில் தனித்தனியாக நடந்த நிகழ்ச்சியில் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
காலை உணவு திட்டம்
தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்ட காலை உணவு திட்டத்தை நாகை மாவட்டம் திருக்குவளையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக கடலூர் மாவட்டத்தில் ஊரக பகுதியில் 1034 தொடக்க பள்ளிகள், பேரூராட்சி பகுதியில் 50 தொடக்க பள்ளிகள், நகராட்சி பகுதியில் 66 தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 66 ஆயிரத்து 630 மாணவர்கள் பயனடைகிறார்கள்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நடுவீரப்பட்டு சி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். மகளிர் திட்ட இணை இயக்குனர் செந்தில் வடிவு வரவேற்றார்.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து, அவரும் அமர்ந்து சாப்பிட்டார். அப்போது அவர், அருகில் அமர்ந்து சாப்பிட்ட மாணவ-மாணவிகளுக்கு உணவு ஊட்டிவிட்டார்.
இதனை தொடர்ந்து 151 பயனாளிகளுக்கு 2 கோடியே 2 லட்சத்து 892 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார். இதில் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, தாசில்தார் விஜய்ஆனந்த், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதா, ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், காசிராஜன், விஜய சுந்தரம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பொன்.பன்னீர்செல்வம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வைத்திலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர்கள் சந்தோஷம் ஆறுமுகம், ராஜாராமன், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனி நன்றி கூறினார்.
பட்டூரில் அமைச்சர் சி.வெ.கணேசன்
திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மாணவர்களுக்கு பரிமாறியதுடன், அவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார். அப்போது அவர் அருகில் அமர்ந்து சாப்பிட்ட மாணவ-மாணவிகளுக்கு உணவு ஊட்டி விட்டார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) மதுபாலன், மங்களூர் ஒன்றியக்குழு தலைவர் சுகுணா சங்கர், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், திட்டக்குடி நகர மன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம், துணை தலைவர் பரமகுரு, பொருளாளர் பிரேம்குமார், நிர்வாகிகள் செந்தில்குமார், இளங்கோவன், சேதுராமன், விக்னேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.