அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்


அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்
x

சூளகிரி ஒன்றியத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேற்று தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி

சூளகிரி,

காலை உணவு வழங்கும் திட்டம்

சூளகிரி ஒன்றியம் பேரிகை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள், ஓசூர் ஒய்.பிரகாஷ், பர்கூர் டி.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். அப்போது ஒரு மாணவருக்கு உணவை ஊட்டினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் முன்னோடி ஒன்றியமாக தேர்வு செய்யப்பட்டு 42 ஊராட்சிக்குட்பட்ட 133 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்து 497 மாணவர்கள், 4 ஆயிரத்து 805 மாணவிகள் என மொத்தம் 10 ஆயிரத்து 302 பேர் பயனடையும் வகையில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதில், 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை உணவு வழங்கப்படும். நகர பகுதிகளிலும், கிராம பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை.

கற்றல் திறன் மேம்படும்

பள்ளிகள் மிக தொலைவில் இருப்பது மட்டுமின்றி, சிலருடைய குடும்ப சூழ்நிலையினாலும் குழந்தைகள் காலை உணவை சாப்பிடுவது இல்லை. இதனை கருத்தில் கொண்டே, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தினால் மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வந்து ஆர்வமுடன் கல்வி கற்பார்கள். இடைநிற்றலை குறைக்க முடியும். பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரிக்கும், மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும். மேலும், வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமை குறையும். கல்வி தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும். மாணவ, மாணவிகள் அனைவரும் அறிவாற்றல் பொருந்தியவர்களாக உயர்வார்கள்.

இந்த திட்டம் ஏழை குழந்தைகளின் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே, மாணவ, மாணவிகள் பள்ளிகளில் வழங்கும் காலை மற்றும் மதிய உணவுகளை உட்கொண்டு, ஆரோக்கியத்துடன் கல்வி கற்று வாழ்க்கையில் உயர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், திட்ட இயக்குனர் மலர்விழி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சந்தானம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story