காலை உணவு திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா?
பாலக்கோடு ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து அரசு தலைமை செயலாளர் அதுல் ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார்.
காலை உணவு திட்டம்
பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் பி.கொல்லஅள்ளி ஊராட்சி பொடுத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் புலிக்கரை ஊராட்சி இருளப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி அந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில அரசு முதன்மை செயலாளரும், தொழிலாளர் நல ஆணையருமான அதுல் ஆனந்த் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் இந்த பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கலெக்டர் சாந்தி முன்னிலையில் அவர் அங்கு காலை உணவு சாப்பிட்டு கொண்டிருந்த குழந்தைகளிடம் காலை உணவு எப்படி உள்ளது என கேட்டறிந்தார்.
உணவு பட்டியல்
அதற்கு குழந்தைகள் எங்களுக்கு தினமும் கொடுக்கப்படும் காலை உணவு மிக நன்றாக இருக்கின்றது. நாங்கள் எல்லோரும் பள்ளியில் தான் காலை உணவு சாப்பிடுகிறோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான காலை உணவு கிடைக்கிறது என்று தெரிவித்தனர். பின்னர் அவர் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட காலை சிற்றுண்டியை சாப்பிட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.
பின்னர் குழந்தைகளுக்கு காலை உணவு சமைத்து வழங்கப்படுகின்ற சமையலறை கூடம், உணவு சமைப்பதற்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள், பாத்திரங்கள், எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். தொடர்ந்து முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி அரசு அறிவித்துள்ள உணவு பட்டியலின்படி சமச்சீரான ஊட்டச்சத்து மிக்க, சத்தான உணவுகளை சமைத்து வழங்க வேண்டும்.
உத்தரவு
இதை ஒவ்வொரு பள்ளிகளிலும் நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து இதனை உறுதி செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அரசு முதன்மை செயலாளர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் தீபனாவிஸ்வேஸ்வரி, மகளிர் திட்ட இயக்குனர் பாபு, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் குமார், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளிநாதன் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.