கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு
வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி:
குடிநீர் குழாயில் உடைப்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூம்புகார், வானகிரி, பெருந்தோட்டம், திருவெண்காடு, கீழமூவக்கரை, திருநகரி, மங்கைமடம், நாங்கூர், ராதா நல்லூர், எடகுடி வடபாதி, காரைமேடு, புதுத்துறை உள்ளிட்ட பல்வேறு கடற்கரை கிராமங்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக கொள்ளிடம் ஆற்றில் சித்தமல்லி என்ற இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, அங்கிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டுவரப்பட்டு எடகுடி வடபாதி ஊராட்சியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட பின்னர் மேற்கண்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் சித்தமல்லி ஆற்றில் இருந்து எடகுடிவடபாதி பகுதிக்கு வரும் குடிநீர் குழாயில் வைத்தீஸ்வரன் கோவில் அருகே மணல்மேடு சாலையில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக அருகில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலில் கலந்து வருகிறது. இந்த உடைப்பால் சாலை சேதம் அடைந்து வருகிறது மேலும் கடற்கரை கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சீரமைக்க வேண்டும்
இதுகுறித்து பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் அருள்குமார் கூறுகையில், வைத்தீஸ்வரன் கோவில் மணல்மேடு சாலையில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலை சேதம் அடைந்து குடிநீர் வீணாக அருகிலுள்ள கால்வாயில் கலந்து வருகிறது. குடிநீர் குழாய் உடைப்பால் இப்பகுதியில் வாகனங்கள் கடந்து செல்லும் பொழுது, நடந்து, மோட்டார் சைக்கிளில் செல்லும் பொதுமக்கள் மீது சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர் தெளித்து வருகிறது .
இந்த உடைப்பால் அடிக்கடி வாகன போக்குவரத்து தடைப்பட்டு வருகிறது. இதே போல் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட நீர் அருகில் உள்ள குடியிருப்பு முன்பு தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து சாலையை சீரமைத்து தர வேண்டுமென தெரிவித்தார்.