கன்னியாகுமரியில் தொடரும் சம்பவம்:சூப்பர் மார்க்கெட்டில் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு


கன்னியாகுமரியில் தொடரும் சம்பவம்:சூப்பர் மார்க்கெட்டில் பூட்டை உடைத்து   ரூ.50 ஆயிரம் திருட்டு
x

கன்னியாகுமரி அருகே சூப்பர் மார்க்கெட்டில் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் ேதடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

நாகர்கோவில், அக்.10-

கன்னியாகுமரி அருகே சூப்பர் மார்க்கெட்டில் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் ேதடி வருகிறார்கள்.

சூப்பர் மார்க்கெட்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் சன்னதி தெருவில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பக்‌ஷாராம் என்பவர் பேன்சி கடை நடத்தி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த கடையின் மேற்கூரையை பிரித்து ரூ.1¾ லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இந்த நிலையில் மீண்டும் ஒரு கடையில் மர்ம நபர்கள் கைவரிசை கட்டியுள்ளனர். கன்னியாகுமரி அருகே உள்ள கிருஷ்ணன்புதூரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 33).

இவர் கன்னியாகுமரி மாதவபுரம் பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். தினமும் இரவு வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவும் வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து கடையை பூட்டி விட்டு சென்றார்.

ரூ.50 ஆயிரம் திருட்டு

இந்தநிலையில் நேற்று காலையில் ராமலிங்கம் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் முன்பக்க ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது பணப்பெட்டியில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் ராமலிங்கத்தின் செல்போன் ஆகியவை மாயமாகி இருந்தது. யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் பூட்டை உடைத்து பணம், செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ராமலிங்கம் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். மேலும் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோரிக்கை

கன்னியாகுமரி பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story