தலையணையில் தடையை மீறி குளிக்கும் சுற்றுலா பயணிகள்
பாபநாசம் தலையணையில் தடையை மீறி சுற்றுலா பயணிகள் குளித்து செல்கிறார்கள்.
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் தலையணையில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் தண்ணீரில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்தது. இதையடுத்து அப்பகுதி ஆபத்து மிகுந்தது என காவல்துறை சார்பாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. தலையணையில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக நிரந்தரமாக தடையும் விதிக்கப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டதுடன் உள்ளே நுழைவு வாயிலில் தடுப்பு சுவரும் கட்டப்பட்டு கேட்டு அமைத்து பூட்டு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது கோடை காலம் என்பதால் தலையணையில் குறைந்த அளவு தண்ணீரே செல்கிறது. இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் தலையணை பகுதியில் குளித்து செல்கின்றனர். மேலும் தடுப்பு சுவர் இருந்தாலும் அவற்றின் மீது ஏறி குதித்து குளிக்க செல்கின்றனர். எனவே இதை தடுக்க தலையணை பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.