தாம்பரம் அருகே நகை கடைக்குள் புகுந்து ரூ.1½ கோடி தங்கம்-வைர நகைகள் கொள்ளை; வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் கைது


தாம்பரம் அருகே நகை கடைக்குள் புகுந்து ரூ.1½ கோடி தங்கம்-வைர நகைகள் கொள்ளை; வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் கைது
x

தாம்பரம் அருகே நகை கடைக்குள் புகுந்து ரூ.1½ கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நகை கடை

சென்னை தாம்பரம் அடுத்த கவுரிவாக்கம் பகுதியில் தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையில் 'புளூ ஸ்டோன்' என்ற பெயரில் நகை கடை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்த நகை கடை திறக்கப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றுவிட்டனர். கடையின் வெளிப்பகுதியில் இரவு நேர காவலாளி பணியில் ஈடுபட்டு இருந்தார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை சுமார் 4.25 மணியளவில் கடையின் ஊழியர் ஜெகதீஷ் என்பவரின் செல்போனுக்கு எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. நகை கடைக்குள் யாரோ புகுந்து விட்டதை உணர்த்தும் வகையில் அலாரம் அடித்ததால் அதிர்ச்சி அடைந்த ஜெகதீஷ், நகை கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா நேரடி காட்சிகளை கண்காணிக்க கூடிய இதே நிறுவனத்தின் பெங்களூரு அலுவலக ஊழியரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றார். அவர் போனை எடுக்காததால் நகைகடையில் காவலுக்கு இருந்த காவலாளிக்கு தகவல் கூறினார். அதற்கு காவலாளி, வெளிப்பகுதியில் எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.

தங்க-வைர நகைகள் கொள்ளை

இதையடுத்து கடை ஊழியர்கள் நேற்று காலை 6 மணிக்கு நேரில் வந்து நகை கடையை திறந்து பார்த்தனர். அப்போது கடைக்குள் விற்பனைக்காக கண்ணாடி பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்த வைரங்கள் பதிக்கக்கப்பட்ட தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக சேலையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் பள்ளிக்கரணை துணை கமிஷனர் ஜோஸ் தங்கையா, தாம்பரம் துணை கமிஷனர் சி.பி.சக்கரவர்த்தி, சேலையூர் உதவி கமிஷனர் முருகேசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.

ரூ.1½ கோடி மதிப்பு

போலீசார் நகை கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையன், கடையின் பின்பகுதியில் உள்ள கழிவுநீர் குழாய்கள் வழியாக மொட்டை மாடிக்கு சென்று, 'லிப்ட்' அறை வழியாக நகை கடைக்குள் புகுந்தது தெரிந்தது. மேலும் நகைகள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு லாக்கரை திறக்க முயன்றபோது அதை திறக்க முடியாததால் கடையில் விற்பனைக்ககாக வாடிக்கையாளரின் பார்வைக்காக கண்ணாடி பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த வைரக்கல் பதித்த தங்க கம்மல்கள், மோதிரங்கள், நெக்லஸ்கள், சங்கிலிகள் என சுமார் ரூ.1½ கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துவிட்டு மீண்டும் அதே வழியில் தப்பிச்சென்றது தெரியவந்தது.

3 பேர் சிக்கினர்

கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையனின் உருவத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கொள்ளை நடைபெற்ற நகைகடை அருகே உள்ள டீக்கடையில் போலீசார் விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு எதுவும் தெரியாததுபோல் நடந்து வந்த கொள்ளையனை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து அவர் தங்கி இருந்த கவுரிவாக்கம் சிவகாமி நகர் திருவள்ளுவர் தெருவில் உள்ள அறையில் சோதனை நடத்தினர்.

அதில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த கொள்ளையன் அணிந்து இருந்த டி-சர்ட்டை வைத்து அவர்தான் கொள்ளையன் என்பதை போலீசார் உறுதி செய்தனர். அவருடன் தங்கி இருந்த மேலும் 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அந்த வீடு முழுவதும் போலீசார் சோதனை செய்தபோது அங்கு எதுவும் சிக்கவில்லை.

அதன் பிறகு பிடிப்பட்ட நபர்களிடம் விசாரணை செய்தபோது வீட்டின் மொட்டை மாடியில் உணவு குப்பைகள் போடப்பட்டிருந்த இடத்தில் பிளாஸ்டிக் கவரில் சுற்றி நகைகளை போட்டு இருப்பது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றனர்.

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்

விசாரணையில் அவர்கள் 3 பேரும், அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த 18 வயதுக்கு குறைவான சிறார்கள் என்பது தெரியவந்தது. கொள்ளை நடைபெற்ற நகை கடைக்கு அருகில் உள்ள ஜூஸ் கடையில் இவர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர்.

நகை கடைக்கு எதிரிலேயே சிவகாமி நகர் திருவள்ளுவர் தெருவில் வடகிழக்கு மாநில இளைஞர்கள் வாடகைக்கு தங்கி உள்ள வீட்டில் வாடகைக்கு அறை எடுத்து கடந்த 3 மாதமாக தங்கி உள்ளனர்.

நகை கடைக்கு அருகிலேயே வேலை பார்த்ததால் நகைகடையை அடிக்கடி நோட்டமிட்ட சிறார்கள், சினிமா‌ பாணியில் நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டு 'லிப்ட்' அறை வழியாக ஒருவரை மட்டும் உள்ளே அனுப்பி கொள்ளையில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

3 பேரையும் கைது செய்த போலீசார், இவர்களின் பின்னணியில் வேறு கும்பல் யாராவது இருக்கிறார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story