கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
கோவில் உண்டியலை உடைத்து திருட்டு- மற்றொரு கோவிலில் கொள்ளை முயற்சி
அம்பை:
அம்பை தாமிரபரணி ஆற்றங்கரையில் இசக்கி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவில் இந்த கோவிலின் கதவை மர்மநபர்கள் உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அங்கு உண்டியலின் பூட்டை உடைத்து திறந்து, அதில் இருந்த பணத்தை திருடினர். மேலும் கோவிலில் இருந்த மற்றொரு உண்டியலையும் உடைக்க முயன்றனர். ஆனால் அதனை உடைக்க முடியாததால், அதில் இருந்த காணிக்கை பணம் தப்பியது.
இதேபோன்று அம்பை மெயின் ரோட்டில் உள்ள வண்டிமறிச்சம்மன் கோவிலின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த கல் உண்டியலை உடைக்க முயன்றனர். ஆனால் அதனை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
நேற்று காலையில் கோவில்களுக்கு சென்ற பக்தர்கள், உண்டியல் உடைக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.