லாரியில் இருந்து உருண்டு விழுந்த பாறாங்கல்; ஆத்திரத்தில் பொதுமக்கள் சாலைமறியல்


லாரியில் இருந்து உருண்டு விழுந்த பாறாங்கல்; ஆத்திரத்தில் பொதுமக்கள் சாலைமறியல்
x

லாரியில் இருந்து நடுரோட்டில் ராட்சத பாறாங்கல் விழுந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்,

லாரியில் இருந்து நடுரோட்டில் ராட்சத பாறாங்கல் விழுந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கனிம வளம் ஏற்றிய வாகனங்கள்

குமரி, நெல்லை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கனரக லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. 10 சக்கரத்திற்கு மேல் உள்ள லாரிகளும் கனிமங்களை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த கனரக வாகனங்களால் குமரி மாவட்டத்தில் அடிக்கடி நெரிசல் ஏற்பட்டு விபத்து நிகழ்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதே சமயத்தில் கனிம வளங்களை குமரியில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லக்கூடாது எனவும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே போக்குவரத்து நெரிசல், விபத்தை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது நெல்லை மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் நாகர்கோவில் நகருக்குள் வராமல் இறச்சகுளம்-களியங்காடு சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. இதற்கு இறச்சகுளம் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சாலையில் விழுந்த கல்

இந்தநிலையில் நேற்று காலையில் இறச்சகுளம்-களியங்காடு சாலை வழியாக ஒரு லாரி ராட்சத பாறாங்கற்களை ஏற்றி சென்றது. அப்போது இறச்சகுளம் அரசு உயர்நிலைப்பள்ளி பகுதியை சென்றடைந்த போது லாரியின் பின்பக்க கதவு உடைந்தது. இதனால் அதிலிருந்த ஒரு ராட்சத பாறாங்கல் சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் சாலை வழியாக யாரும் வரவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதனை அறிந்த பொதுமக்கள் ஆத்திரத்தில் இறச்சகுளம் சந்திப்பில் திரண்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வந்த பஸ்சையும் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

இதுபற்றி அறிந்ததும் நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன்குமார் மற்றும் அதிரடிபடையினருடன் விரைந்தார். பின்னர் தோவாளை தாசில்தார் வினைதீர்த்தான், பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ஆகியோருடன் சேர்ந்து சாலை மறியல் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது கனிம வளங்களை ஏற்றி வரும் கனரக வாகனங்களை இந்த சாலை வழியாக இயக்கக்கூடாது என்ற கோரிக்கையில் போராட்டக்காரர்கள் விடாப்பிடியாக இருந்தனர்.

பேச்சுவார்த்தை

பின்னர் வருகிற 15-ந் தேதி முதல் கல் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் வேறுபாதையில் மாற்றி விட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறிய பிறகு போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். 2 மணி நேரம் நடந்த மறியலால் அந்த வழியாக பஸ்சில் வந்த பயணிகள் கடுமையாக அவதிக்குள்ளானார்கள்.

இதற்கிடையே பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு சாலையில் விழுந்த பாறாங்கல்லை அப்புறப்படுத்தப்பட்டது.


Next Story