தஞ்சை அரண்மனை வளாகத்தில் புத்தகத் திருவிழா
தஞ்சை அரண்மனை வளாகத்தில் புத்தகத் திருவிழா 14-ந் தேதி தொடங்குகிறது.
தஞ்சாவூர்;
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்த மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு பிறகு கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறியதாவது:-
தஞ்சை அரண்மனை வளாகத்தில் புத்தகத் திருவிழா வருகிற 14-ந் தேதி தொடங்கி தொடர்ந்து 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகம், பொது நூலகம், தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் 6-வது புத்தகத் திருவிழா 11 நாட்கள் நடைபெற உள்ளது.
மேலும், தஞ்சை புத்தகத் திருவிழா-2023 இலச்சினை வடிவமைப்பு போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தஞ்சை புத்தகத் திருவிழாவுக்கான இலச்சினையை வடிவமைத்து ஒரு எம்.பி. அளவில் ஜே.பி.ஜி. படமாக https://thanjavur.nic.in/thanjavurbookfestival என்ற இணையதளத்தில் தங்கள் பெயர், வயது, முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றுடன் வருகிற 7-ந் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த புத்தகக் கண்காட்சியின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே வாசிப்புத்திறனை மேம்படுத்த முடியும். இதேபோல, புத்தகம் வாசிக்கும் வாசகர்கள் எண்ணிக்கையும் அதிகப்படுத்தும் நோக்கத்துடன் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் என்.ஓ. சுகபுத்ரா (வருவாய்), எச்.எஸ். ஸ்ரீகாந்த் (வளர்ச்சி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்