திருச்சியில் புத்தக திருவிழா தொடக்கம்
திருச்சியில் புத்தக திருவிழா தொடங்கியது.
மாணவர்கள் நிறைய படித்து திருச்சிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று புத்தக திருவிழா தொடக்க விழாவில் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
புத்தக திருவிழா
திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் நேஷனல் புக் ட்ரஸ்ட் இணைந்து புத்தக திருவிழாவை திருச்சி ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்தினர். இந்த விழா நேற்று தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கி, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அரங்குகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
பின்னர் நடந்த விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
மாநகராட்சி விரிவாக்கம்
திருச்சிக்கு முதன்முதலாக புத்தக திருவிழா வந்துள்ளது. இது உங்களுக்கு மேலும் பலம் சேர்க்கும். மாணவர்களாகிய நீங்கள் நிறைய படித்து திருச்சிக்கு பெருமை சேர்க்க வேண்டும். திருச்சி மாநகராட்சி சென்னை மாநகராட்சியை போல் விரிவுபடுத்தப்பட உள்ளது. சென்னை, கோவை, மதுரை என்று இருப்பதை மாற்றி, சென்னைக்கு அடுத்ததாக திருச்சி வர வேண்டும் என்று முதல்-அமைச்சர் கூறி இருக்கிறார். மணப்பாறை அருகே உணவுபதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு துறையூரில் புதிய கல்லூரி வர இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறையில் இந்தாண்டு ரூ.3 ஆயிரம் கோடியில் புதிய வகுப்பறைகளை கட்ட கூறி இருக்கிறார். மதுரையில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்ட பிறகு 3 மடங்கு பெரிதாகி உள்ளது. இதேபோல் திருச்சியில் ரூ.850 கோடியில் புதிய பஸ் நிலையம், சரக்கு முனையம், கொடிசியா போன்ற அரங்கம் உருவாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
ஞாபகத்திறன் அதிகரிக்கும்
அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், அறிவுசார்ந்த உலகத்தை அமைக்க வேண்டும் என்ற கருத்தை கொண்டது தான் திராவிட மாடல் ஆட்சி. அறிவார்ந்தவர்கள் தான் புத்தகங்களை படிக்க வேண்டும் என்பது இல்லை. நமக்கு தேவையானவற்றை படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்றவாறு புத்தகங்களை வாங்கி கொடுத்து அவர்களுக்கு படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். புத்தகம் படிப்பது மூலம் ஞாபகத்திறன் அதிகரிக்கும் என்றார்.
இதில் கலெக்டர் பிரதீப் குமார், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், நேஷனல் புக் ட்ரஸ்ட் இயக்குனர் யுவராஜ் மாலிக், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, கவிஞர் நந்தலாலா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். புத்தக திருவிழா காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. இதில் 160 புத்தக அரங்குகள், 150-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்களின் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு அறிவியல் இயக்ககத்தின் சார்பில் கோளரங்கம், வான்நோக்குதல் மாணவர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் மாலை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த விழா வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது.
தினத்தந்தி பதிப்பகத்தின் புத்தகங்கள் சலுகை விலையில் விற்பனை
புத்தக திருவிழாவில் தினத்தந்தி பதிப்பகத்தின் புத்தகங்கள் 64-வது அரங்கில் விற்பனையாகிறது. இதில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சாதனை சரித்திரம், தமிழ் சினிமா வரலாறு பாகம் 1, வரலாற்றுச்சுவடுகள் பாகம் 1 முதல் 4 வரை ஆகிய புத்தகங்கள் சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. நம்ப முடியாத உண்மைகள், கேள்வியும் நானே பதிலும் நானே, பழகிப்பார்ப்போம் வாருங்கள், தூரமில்லை தொட்டுவிடலாம், இதுவும் கடந்து போகும், நமக்குள் சில கேள்விகள், இளமையில் வெல், நதிபோல ஓடிக்கொண்டிரு, நீங்களும் தலைவர் ஆகலாம், உஷாரய்யா உஷாரு, ஆயுளை அதிகரிக்கும் ஆரோக்கிய உணவுகள், பரபரப்பான வழக்குகள், நோய் தீர்க்கும் சிவாலயங்கள், 23 தோஷங்கள் பரிகார ஆலயங்கள், அறிவோம் இஸ்லாம், ஆலய வழிபாடு ஏன்? எதற்கு? எப்படி?, சிறகை விரிக்கும் மங்கள்யான், சிகரம் தொடும் சிந்தனைகள், செய்தி தரும் சேதி, ஆதிச்சநல்லூர்-கீழடி மண் மூடிய மகத்தான நாகரிகம், மருத்துவ பூங்கா, நலம் தரும் மூலிகை சமையல், வாழ்வை வளமாக்கும் பூஜை-விரதமுறைகள் உள்பட 53 வகையான புத்தகங்கள் அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. புத்தக கண்காட்சியில் பங்கேற்றவர்கள் தினத்தந்தி பதிப்பகத்தின் புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.