குறைவு முத்திரை தீர்வை செலுத்தி பத்திரங்களை பெற்று கொள்ளலாம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்


குறைவு முத்திரை தீர்வை செலுத்தி பத்திரங்களை பெற்று கொள்ளலாம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்
x

பத்திரப்பதிவு துறையில் முறையான கட்டணம் செலுத்தாதவர்கள் குறைவு முத்திரை தீர்வையை செலுத்தி ஆவணங்களை பெற்று கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்

சிறப்பு முனைப்பு இயக்கம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பதிவுத்துறை வாயிலாக இந்திய முத்திரை சட்ட பிரிவுகள் மற்றும் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள இனங்களை குறைத்திட சிறப்பு முனைப்பு இயக்கம் வருவாய் மாவட்டம் தோறும் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி பதிவு மாவட்டங்களான சென்னை, திருவள்ளுர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வருகிற மார்ச் மாதம் 31-ந்தேதி வரையிலான காலத்திற்கு ஒரு சிறப்பு முனைப்பு இயக்கம் நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

குறைவு முத்திரை தீர்வை

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளுர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய 63 சார்பதிவகங்களில் பதிவு செய்த ஆவணங்கள் தொடர்பாக குறைவு முத்திரை தீர்வையை செலுத்த தவறி, அதன் காரணமாக முடக்கப்பட்ட ஆவணங்களை அந்த ஆவணத்திற்குரிய விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட குறைவு முத்திரை தீர்வையை சம்பந்தப்பட்ட கிரையதாரர்கள் செலுத்தி ஆவணங்களை விடுவித்து கொள்ளலாம். அவ்வாறான கிரையதாரர்கள் தங்கள் ஆவணத்திற்கு ஏற்பட்டுள்ள குறைவு முத்திரை தீர்வையை (அசல் மற்றும் வட்டியுடன்) அசல் ஆவணத்தை விடுவித்து கொள்ள ஏதுவாக சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைத்தாள்) மற்றும் காஞ்சீபுரம் தனி தாசில்தாரை தொடர்பு கொண்டு, இந்த சிறப்பு முனைப்பு இயக்கத்தை பயன்படுத்தி பயனடையலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story