கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்


கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
x

கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் ஒரு மணி நேரம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை

கோயம்பேடு,

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 11.20 மணிக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர், "கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள நடைமேடை 1-ல் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. சரியாக 11 மணிக்கு அது வெடிக்கும்" என மிரட்டல் விடுத்துவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

ஆனால் 11 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என 11.20 மணிக்கு மர்மநபர் தகவல் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், இது புரளியாக இருக்கலாம் என கருதினர். எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயம்பேடு போலீசார், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பஸ் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து மோப்ப நாய் 'ராம்போ', 'உத்தமா' உடன் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்தனர். அவர்கள், பஸ் நிலையத்தில் ஒவ்வொரு பகுதியாக சோதனை நடத்தினர். நடைமேடையில் அமர்ந்து இருந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகள், குப்பை தொட்டி, வெளியில் இருந்து பஸ் நிலையத்துக்கு உள்ளே வந்தவர்கள் என அங்குலம் அங்குலமாக மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தினர்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கோயம்பேடு பஸ் நிலைய வளாகம் முழுவதும் சோதனை நடத்தியும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர்தான் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என உறுதியானது.

இதையடுத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்மநபரின் செல்போன் எண்ணை வைத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்?, எதற்காக மிரட்டல் விடுத்தார்? என கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story