சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்


சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
x

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து ரெயில்வே போலீசார் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர்.

சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் வழக்கம்போல் தங்கள் பணிகளை செய்து வந்தனர்.

இந்த நிலையில், எழும்பூர் ரெயில் நிலைய அதிகாரிக்கு மதியம் 12 மணியளவில் தபால் மூலம் ஒரு கடிதம் வந்தது.அந்த கடிதம் மதுராந்தகத்தில் இருந்து மேகநாதன் என்ற பெயரில் வந்ததாக கூறிப்பிடப்பட்டுள்ளது. அதனை நிலைய அதிகாரி பிரித்து படித்தார். அப்போது அதில் ``வன்னியர் சமுதாயத்தையும், பா.ம.க. கட்சியையும் தரைகுறைவாக பேசிவரும் தி.மு.க. அரசுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் சென்னை எழும்பூரில் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன்'' என எழுதி இருந்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நிலைய அதிகாரி, ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சிவனேசன் ஆகியோருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து எழும்பூர் ரெயில் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் கடற்கரை ராஜ், வெடிகுண்டு நிபுணர் குழுவினர் மோப்ப நாய் உதவியுடன் பயணிகளின் உடைமைகள் மற்றும் ரெயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். இதனால் எழும்பூர் ரெயில் நிலையேமே பரபரப்பாக காணப்பட்டது..

போலீசாரின் சோதனையில் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இதன்மூலம் மிரட்டல் கடிதம் போலியானது என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதுகுறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இதனையடுத்து கடிதம் வந்த முகவரியை வைத்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மேகநாதன் என்பவர் தபால் நிலையத்தில் வேலை செய்வதும், அவருடைய பெயரில் வேறு ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியதும் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் இதற்கு முன்பும் இதே முகவரில் இருந்து வெவ்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மேகநாதனை பழிவாங்கும் நோக்கில் அவருடைய எதிரிகள் யாராவது இது போன்று கடிதங்களை அனுப்புகிறார்களா ? என்ற கோணத்திலும் போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.



Next Story