சென்டிரல் ரெயில்நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்டிரல் ரெயில்நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையின் முக்கிய ரெயில்நிலையமாக சென்டிரல் ரெயில்நிலையம் திகழ்கிறது. இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு 9.45 மணியளவில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். அப்போது, சென்டிரல் ரெயில்நிலைய வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக்கூறி தொடர்பை துண்டித்துவிட்டார். வெடிகுண்டு மிரட்டல் குறித்து பெரியமேடு, பூக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீசார் மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய் உதவியுடன் சென்டிரல் ரெயில்நிலையத்தில் தீவிர சோதனை நடத்தினர். ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடமைகளை போலீசார் தீவிர சோதனை செய்தனர். சுமார் 5 மணிநேரத்திற்கும் மேலாக வெடிகுண்டு நிபுணர் குழு மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, போலீசார் சம்பந்தப்பட்ட தொலைபேசி அழைப்பு எங்கிருந்து வந்தது என்று ஆய்வுசெய்தனர். அப்போது, கீழ்ப்பாக்கம் அரசு மனநல ஆஸ்பத்திரியில் இருந்து வந்தது தெரியவந்தது. பின்னர், கீழ்ப்பாக்கம் அரசு மனநல ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கீழ்ப்பாக்கம் அரசு மனநல ஆஸ்பத்திரியில் கடந்த 7 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வியாசர்பாடியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 21) போலியான வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
மணிகண்டனைப் பார்ப்பதற்கு நேற்று முன்தினம் மாலை அவரது தந்தை ராமலிங்கம் ஆஸ்பத்திரிக்குச் சென்றபோது தந்தையின் செல்போனை பறித்து அதிலிருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, மணிகண்டனின் தந்தை ராமலிங்கத்தை போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்தனர். இச்சம்பவத்தால் சென்டிரல் ரெயில்நிலையத்தில் பரபரப்பு நிலவியது.