கொள்ளிடம் ஆற்று மதகில் சிக்கிய வாலிபர் உடல் மீட்பு
கொள்ளிடம் ஆற்று மதகில் சிக்கிய வாலிபர் உடல் மீட்பு
கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்று மதகில் சிக்கிய வாலிபர் உடல் மீட்கப்பட்டது.
மதகில் சிக்கினார்
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள திருவைக்காவூர் கிராமம் தெற்கு தெருவில் வசிப்பவர் ரவி. இவரது மகன் தினேஷ்(வயது21). கடந்த 29-ந்தேதி இவர் வீட்டில் தனக்கு சொந்தமான பசு மாட்டை ஓட்டிக்கொண்டு கொள்ளிடம் ஆற்றில் மேய்ப்பதற்கு சென்றுள்ளார். அப்போது மாடு கொள்ளிடம் ஆற்று தண்ணீரை கடந்து சென்றது. இதனை கண்ட தினேஷ் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி உள்ளார். அப்போது ஆற்று மதகில் சிக்கி கொண்டார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் பாபநாசம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் பாபநாசம் தீயணைப்பு நிலையத்தினர் மற்றும் தஞ்சை தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடந்த 2 நாட்களாக தினேசை தேடிவந்தனர்.
உடல் கரை ஒதுங்கியது
நேற்று சுவாமிமலை அருகே உள்ள குடிதாங்கி கொள்ளிடம் கரையில் தினேசின் உடல் கரை ஒதுங்கியது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சுவாமிமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தினேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.