விபத்தில் பலியான வாலிபர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
நெல்லை அருகே விபத்தில் பலியான வாலிபர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதி சடங்கிற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நிதிஉதவி செய்தார்.
நெல்லை அருகே விபத்தில் பலியான வாலிபர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதி சடங்கிற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நிதிஉதவி செய்தார்.
விபத்தில் வாலிபர் பலி
நெல்லை அருகே அழகநேரி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரின் மனைவி முத்தம்மாள். இவர்களின் மகன் காளிதாஸ் என்ற கார்த்திக் (வயது 25). செண்டை மேள கலைஞரான இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் முத்துகணேஷ் (21), கண்ணன் மகன் கோபி பாண்டியன் (25) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை கார்த்திக் ஓட்டினார்.
ஆரைக்குளம் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி கொண்டிருந்த தனியார் மினி பஸ் மீது, கார்த்திக் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மற்ற 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
உடல் ஒப்படைப்பு
கார்த்திக்கின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரின் உடலை பார்த்து முத்தம்மாள் கதறி அழுதார். திருமணமாகி பல ஆண்டுகளுக்கு பிறகு கோவில் கோவிலான ஏறி இறங்கி பெற்ற ஒரே மகனை இழந்துவிட்டேன். கணவரையும் இழந்து விட்டேனே என அவர் கதறி அழுதது அங்கிருந்த அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.
இறுதி சடங்கிற்கு உதவி
அப்போது அங்கு வந்த முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார், உயிர் இழந்த வாலிபரின் இறுதி சடங்குக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்று அவரின் தாய்க்கு நிதிஉதவி வழங்கினார். மேலும் அங்கு வந்திருந்த கார்த்திக்கின் நண்பரிடம் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும். உயிரை விட போலீசாரின் அபராதம் பெரிதல்ல. தவறுகளை திருத்திக்கொள்ளத்தான் அபராதம் விதிக்கப்படுகிறது. உங்கள் அனைவருக்கும் குடும்பம் உள்ளது. அதனை நினைத்து மோட்டார் சைக்கிளை நிதானமாக ஓட்டுங்கள் என்று அறிவுரை வழங்கினார்.