போடி காய்கறி மார்க்கெட்டில்ஆக்கிரமிப்பை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு:அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

போடி காய்கறி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காய்கறி மார்க்கெட்
போடியில், திருவள்ளுவர் சிலை எதிரில் உள்ள சாலையில் சுமார் 75 ஆண்டுகளுக்கும் மேலாக காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இதில் பலர் சொந்த கட்டிடத்திலேயே கடைகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில், போடி பஸ் நிலையம் அருகே புதிதாக 40 கடைகளுடன் கட்டப்பட்ட வணிக வளாகத்தில் மார்க்கெட் செயல்படும் என்று கூறப்பட்டது.
இதற்கிடையே தற்போது இயங்கி வரும் காய்கறி மார்க்கெட்டில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளதாகவும், புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில் 40 கடைகள் மட்டுமே உள்ளதாகவும் வியாபாரிகள் கூறினர். மேலும் அந்த 40 கடைகளையும் தனி நபர் ஒருவரே ஏலம் எடுத்துள்ளார். அதற்கு அவர் வாடகை மற்றும் முன்பணம் கேட்பதாக கூறி வியாபாரிகள் அங்கு செல்ல மறுத்து விட்டனர்.
ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு
இந்நிலையில் நேற்று காலை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) செல்வராணி தலைமையில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் காய்கறி மார்கெட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக வந்தனர். அப்போது ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள், அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கால அவகாசம் ஏதும் கொடுக்காமல் உடனடியாக எப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றலாம் என்று அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 2 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கூறிவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.