பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து சென்ற படகுகள்


பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து சென்ற படகுகள்
x
தினத்தந்தி 11 May 2023 12:15 AM IST (Updated: 11 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் தூக்கு பாலத்தை பாய்மரப்படகு மற்றும் மிதவை படகு உள்ளிட்ட ஏராளமான ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கடந்து சென்றன.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

பாம்பன் தூக்கு பாலத்தை பாய்மரப்படகு மற்றும் மிதவை படகு உள்ளிட்ட ஏராளமான ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கடந்து சென்றன.

காத்திருந்த படகுகள்

பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தை கடந்து செல்வதற்காக கோட்டியா என்று சொல்லக்கூடிய பாய்மர படகு மற்றும் இரண்டு மிதவை கப்பல்கள், ஏராளமான ஆழ்கடல் மீன்பிடி படகுகளும் பாம்பன் தென்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலம் நேற்று திறக்கப்பட்டது. தொடர்ந்து லட்சத்தீவில் இருந்து கடலூர் துறைமுகம் செல்வதற்காக பாய்மர படகானது துறைமுக அதிகாரிகள் அனுமதியுடன் பாம்பன் தூக்குப்பாலத்தை பாதுகாப்பாக கடந்து சென்றது.

தொடர்ந்து மும்பையில் இருந்து மண்டபத்திற்கு வந்த 2 சிறிய மிதவை படகுகளும் ஒன்றன்பின் ஒன்றாக தூக்குப்பாலத்தை கடந்து சென்றன.

ஆழ் கடல் படகுகள்

கேரளாவில் இருந்து நாகப்பட்டினம் செல்வதற்காக வந்து பாம்பன் தென்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக அணிவகுத்தபடி தூக்குப்பாலத்தை மெதுவாக கடந்து நாகப்பட்டினம் நோக்கி சென்றன. தற்போது தமிழகம் முழுவதும் மீன்கள் இனப்பெருக்க கால சீசன் நடைபெற்று வருவதை தொடர்ந்து வருகின்ற ஜூன் 14-ந் தேதி வரையிலும் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆழ்கடல் மீன்பிடி படகுகள் அனைத்தும் சொந்த ஊரான நாகப்பட்டினத்திற்கு செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில் பாம்பன் தூக்குப்பாலத்தை பாய்மரப்படகு, மிதவைப்படகு மற்றும் ஏராளமான மீன்பிடி படகுகள் கடந்து சென்றதை ரோடு பாலத்தில் நின்றபடி ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.


Next Story