சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படும் மண்டபம் படகு சவாரி தளம்


சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படும் மண்டபம் படகு சவாரி தளம்
x
தினத்தந்தி 8 May 2023 12:15 AM IST (Updated: 8 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அதிக கட்டணத்தால் மண்டபம் சுற்றுலா படகு சவாரிக்கு சுற்றுலா பயணிகளிடையே ஆர்வம் இல்லாததால் படகு தளம் வெறிச்சோடி காணப்படுகிறது.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

அதிக கட்டணத்தால் மண்டபம் சுற்றுலா படகு சவாரிக்கு சுற்றுலா பயணிகளிடையே ஆர்வம் இல்லாததால் படகு தளம் வெறிச்சோடி காணப்படுகிறது.

படகு சவாரி

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட வனத்துறை மூலம் இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக சூழல் சார்ந்த சுற்றுலா திட்டத்தின் கீழ் பல இடங்களில் சுற்றுலா படகு போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளன. இதில் ஏர்வாடி அருகே உள்ள பிச்சைமூப்பன்வலசை கடற்கரை, தொண்டி காரங்காடு, உச்சிப்புளி அருகே அரியமான் கடற்கரை, பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து குருசடைதீவு உள்ளிட்ட இடங்களில் வனத்துறை மூலம் சூழல் சார்ந்த சுற்றுலா திட்டத்தின் கீழ் சுற்றுலா படகு போக்குவரத்தும் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

கூடுதலாக மேலும் ஒரு இடமாக மண்டபம் வனச்சரகத்திற்குட்பட்ட மண்டபம் காந்தி நகர் பகுதியில் உள்ள வனத்துறை புற காவல் நிலையத்தில் இருந்து பாம்பன் ரோடு பாலம் வரையிலான கடல் பகுதிக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி முதல் வனத்துறை மூலம் சுற்றுலா படகுசவாரி தொடங்கப்பட்டது. தற்போது கோடைகால விடுமுறையில் ராமேசுவரம் பகுதிக்கு கடந்த சில நாட்களாகவே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

அதிக கட்டணம்

இவ்வாறு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையிலும் மண்டபம் சுற்றுலா படகு சவாரிக்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை என்று கூறப்படுகின்றது. அதற்கு முக்கிய காரணம் படகு சவாரி செய்ய நபர் ஒருவருக்கு ரூ.300 என அதிகமான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மண்டபம் படகு நிறுத்தும் தளத்திலிருந்து செல்லும் படகானது ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் வரையிலான கடல் பகுதிக்கு மட்டுமே சுற்றுலா பயணிகளை படகில் அழைத்து சென்று மீண்டும் அதே இடத்தில் இறக்கி விடப்படுகின்றனர்.

இவ்வளவு குறுலான தூரத்திற்கு ரூ.300 என்ற கட்டணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் படகில் அமர்ந்தபடியே கடலில் உள்ள மீன்கள் மற்றும் பவளப்பாறைகளை பார்ப்பதற்கோ படகில் கண்ணாடி இலை வசதிகளும் இல்லாததால் இந்த படகு போக்குவரத்துக்கு சுற்றுலா பயணிகளிடையே ஆர்வம் குறைவாகவே உள்ளது.

கோரிக்கை

இதனால் பல நாட்களில் சுற்றுலா பயணிகள் இல்லாமல் இந்த படகு சவாரி தளமானது காணப்படுகிறது. எனவே மாவட்ட வனத்துறை அதிகாரிகள் மண்டபம் சுற்றுலா படகு சவாரியில் கட்டணத்தை சற்று குறைப்பதற்கும், படகில் இருந்தபடியே கடலில் உள்ள மீன்கள் மற்றும் பல அரிய வகை கடல் வாழ் உயிரினங்களையும் பார்க்கும் வகையில் கண்ணாடி இலையிலான படகை பயன்படுத்த வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story