ஆத்தூர் அருகே முட்டல் ஏரியில் விசைப்படகு போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் வனத்துறை அறிவிப்பு
ஆத்தூர் அருகே உள்ள முட்டல் ஏரியில் விசைப்படகு போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
ஆத்தூர்,
முட்டல் ஏரி
ஆத்தூர் அருகே உள்ள கல்லாநத்தம் கிராமத்தில் இருந்து வடக்கே சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது முட்டல் ஏரி. இந்த ஏரியை சுற்றுலாத்தலமாக பிரபலமாக்கும் வகையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மிதவை படகுகள் மூலம் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்திட ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் முட்டல் ஏரிக்கு வந்து உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் முட்டல் ஏரியை சுற்றுலா பயணிகள் வருகையை மீண்டும் அதிகரிக்க வனத்துறை மூலம் சேலம் மாவட்ட கலெக்டர் தனது விருப்ப நிதியில் இருந்து ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்து, விசைப்படகு போக்குவரத்து தொடங்கிட உத்தரவிட்டார்.
விசைப்படகு போக்குவரத்து
இதையடுத்து விசைப்படகில் மோட்டார் பொருத்தும் பணி தற்போது நடந்து வருகிறது. இருப்பினும் தற்போது முட்டல் ஏரியில் தண்ணீர் குறைவாக உள்ளது. எனவே தண்ணீர் வரத்து அதிகமான உடன் விசைப்படகு போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
மேலும் முட்டல் ஏரியில் இருந்து வடக்கே உள்ள ஆனைவாரி நீர்வீழ்ச்சியிலும் தண்ணீர் வரத்து மிக குறைவாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குறைந்த அளவிலேயே வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் 19-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் இங்கு சுற்றுலா பயணிகள் வருகை சற்று அதிகரித்து இருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.