திருச்செந்தூர் அருகே படகு கவிழ்ந்தது:கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் பத்திரமாக மீட்பு


திருச்செந்தூர் அருகே படகு கவிழ்ந்தது:கடலில் தத்தளித்த 6 மீனவர்கள்  பத்திரமாக மீட்பு
x
தினத்தந்தி 23 Sept 2023 12:15 AM IST (Updated: 23 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே படகு கவிழ்ந்ததால் கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதில் ரூ.3½ லட்சம் மதிப்பிலான வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்தது.

கடலுக்கு சென்றனர்

திருச்செந்தூர் ஜீவாநகர் மீனவர் காலனியை சேர்ந்தவர் அந்தோணி மகன் சந்தியாகு (59). இவருக்கு சொந்தமான பைபர் படகில் அவர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த இன்னாசி (54), தொம்மை (58), கிளைட்டன் (45), இன்னோசென்ட் (55), மில்கிஸ்ட்டன் (18) ஆகிய 6 பேரும் நேற்று அதிகாலை 3 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மீன் பிடித்து விட்டு கரை திரும்பிக்கொண்டிருந்தனர்.

படகு கவிழ்ந்தது

அப்போது கடலில் ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி பைபர் படகு கவிழ்ந்தது. இதில் 6 மீனவர்களும் கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கரை திரும்பி கொண்டிருந்த மற்ற மீனவர்கள், தத்தளித்த மீனவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அந்த பகுதி மீனவர்கள் இரு பைபர் படகில் மீண்டும் கடலுக்கு சென்று, கடலில் கவிழ்ந்த படகை கயிறு கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தில் சுமார் ரூ.3½ லட்சம் மதிப்பிலான வலைகள் கடலில் விழுந்து நாசமானது. மேலும் என்ஜின் உள்ளிட்ட உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் கடலோர பாதுகாப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story