மடத்துக்குளம் நில அளவைப் பிரிவில் லஞ்சம், ஊழலுக்கு எதிராக முற்றுகை போராட்டம்
மடத்துக்குளம் தாலுகா அலுவலக நில அளவைப் பிரிவில் நிலவி வரும் லஞ்சம் ஊழலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்) கட்சியினர் தாலுகா அலுவலகம் முன் பதாகை வைத்துள்ளனர்.
மடத்துக்குளம் தாலுகா அலுவலக நில அளவைப் பிரிவில் நிலவி வரும் லஞ்சம் ஊழலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்) கட்சியினர் தாலுகா அலுவலகம் முன் பதாகை வைத்துள்ளனர்.
முற்றுகை போராட்டம்
இதுகுறித்து கட்சியினர் கூறியுள்ளதாவது:-
'மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் தலைமை நில அளவையர் உள்பட அனைவரும் குறுநில மன்னர்கள் போல செயல்படுகின்றனர். அனைத்து வேலைகளுக்கும் கிராம நிர்வாக அலுவலர் மூலமாகவும், நேரடியாகவும் லஞ்சம் பெறப்படுகிறது. லஞ்சம் கொடுக்காத விவசாயிகளின் கணினி பதிவேற்றத்தில் திட்டமிட்டு தவறு செய்யப்படுகிறது. அந்த தவறை சரி செய்ய ஆண்டுக்கணக்கில் அலைய விடுகின்றனர். இவை அனைத்தும் தெரிந்தும் தாசில்தார் வெறும் பார்வையாளராகவே இருக்கிறார். எனவே திட்டமிட்டு அரசின் பெயரைக் கெடுக்கும் இந்த தவறுகளை சரி செய்யாவிட்டால் விவசாயிகள் முற்றுகைப் போராட்டம் நடைபெறும்'.
இ்வ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
தரமான சிகிச்சை
இதுபோல் மடத்துக்குளம் அரசு ஆஸ்பத்திரி முன் வைத்துள்ள பதாகையில், 'மடத்துக்குளம் அரசு தாலுகா மருத்துவமனையில் 7 டாக்டர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 1 அல்லது 2 பேர் மட்டும் பணிபுரிகிறார்கள். அதிலும் இரவு நேரங்களில் பெரும்பாலான நாட்களில் டாக்டர்களே இருப்பதில்லை. ஸ்கேன், எக்ஸ்ரே பிரிவில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே ஊழியர்கள் பணி புரிகிறார்கள்.
மேலும் காலியாகவுள்ள செவிலியர் பணி இடங்களை உடனே நிரப்ப வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் சுகாதார சீர்கேடுகளை தவிர்க்க வேண்டும். தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் தாலுகா தலைமை மருத்துவமனையில் தரமான சிகிச்சை கிடைப்பதில்லை. தலைமை மருத்துவமனையின் அவல நிலையை சரி செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
பரபரப்பு
தாலுகா அலுவலக நில அளவைப்பிரிவு மற்றும் தாலுகா தலைமை மருத்துவமனைக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள பதாகைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.