டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம்


டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம்
x

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

டாஸ்மாக் கடை

புதுக்கோட்டை வடக்குராஜ வீதியில் உள்ள பழனியப்பா முக்கத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதன் அருகே அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனை, அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இங்குள்ள டாஸ்மாக் கடையால் அப்பகுதி வழியாக மருத்துவமனைக்கு செல்லும் கர்ப்பிணிகள், பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும், சட்டத்திற்கு புறம்பாக நகராட்சி கட்டிடத்தில் உள்வாடகையில் இந்தக்கடை இயங்கி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

முற்றுகை போராட்டம்

இந்தநிலையில் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கடையின் முன்பாக நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில், கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த டாஸ்மாக் மாவட்ட துணை மேலாளர் கருப்பையா, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜபார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் அந்த கடையை ஒரு மாதத்திற்குள் வேறு இடத்திற்கு மாற்றுவதாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story