சாயல்குடி பகுதியில் 'கமகம'க்கும் கருப்பட்டி தயாரிப்பு


சாயல்குடி பகுதிகளில் கருப்பட்டி தயாரிப்பு மும்முரமாக நடப்பதால் அப்பகுதி கருப்பட்டி வாசத்தில் கமகமக்கிறது. ஆனால், கிலோ ரூ.150-க்கு மட்டுமே வியாபாரிகள் வாங்குவதால் பனைதொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம்

சாயல்குடி

சாயல்குடி பகுதிகளில் கருப்பட்டி தயாரிப்பு மும்முரமாக நடப்பதால் அப்பகுதி கருப்பட்டி வாசத்தில் கமகமக்கிறது. ஆனால், கிலோ ரூ.150-க்கு மட்டுமே வியாபாரிகள் வாங்குவதால் பனைதொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பனை மரங்கள்

கற்பகத்தரு என்று அழைக்கப்படும் பனை மரத்தில் இருந்து பனங்கிழங்கு, நுங்கு, பனங்காய், பனம்பழம் போன்ற உணவுப்பொருட்களும், பனைமட்டை, நார், பனை ஓலை, பனஞ்சட்டம் உள்ளிட்ட கட்டுமானப்பொருட்களும் கிடைக்கின்றன..

அதிலும் பதநீரில் இருந்து காய்ச்சப்படும் கருப்பட்டிக்கு மணம், சுவை மட்டுமின்றி மருத்துவ குணங்களும் ஏராளம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமான பனைகள் உள்ளன. குறிப்பாக சாயல்குடி அருகே மாரியூர், நரிப்பையூர், கன்னிராஜபுரம், பூப்பாண்டியபுரம், கூராங்கோட்டை, பெரியகுளம், ஒப்பிலான், கடுகுசந்தை சத்திரம், மேலச்செல்வனூர், காவாகுளம், கீழக்கிடாரம், மேலக்கிடாரம், கிருஷ்ணாபுரம், மூக்கையூர், எல்லைப்புஞ்சை, மாணிக்கநகர், வெட்டுக்காடு, சத்திரம் உள்பட நூற்றுக்கணக்கான கிராமங்களில் பனைத்தொழிலை நம்பி சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இவர்கள் பதநீர் சேகரிப்பு மற்றும் கருப்பட்டி தொழிலில் அதிக அளவில் ஈடுபடுகின்றனர்.

கருப்பட்டி தயாரிப்பு

இப்பகுதியில் தயாரிக்கப்படும் கருப்பட்டிகளுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் நல்ல மவுசு உள்ளது. தற்போது பெரும்பாலானவர்கள் பாரம்பரிய உணவு பழக்கத்திற்கு திரும்பியுள்ளனர். இதையடுத்து கருப்பட்டிகளுக்கு பொதுமக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது.

ரசாயன கலவை கொண்ட சர்க்கரைக்கு மாற்றாக பனங்கருப்பட்டிகளை தங்களது அன்றாட உணவில் சேர்த்து வருகின்றனர்.

ஆனால் கருப்பட்டி தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 90 சதவீதத்தினருக்கு பனைகள் சொந்தமாக இல்லை.

இதனால் பனைமரம் உள்ள நிலங்களின் உரிமையாளர்களிடம் பனைகளை குத்தகைக்கு எடுத்து தொழில் செய்து வருகின்றனர். தினமும் உயிரைப்பணயம் வைத்து பனைமரத்தில் ஏறி பதநீர் இறக்குகிறார்கள். தினமும் பனைமரத்தின் பாளையைச் சீவி மண் கலயத்தில் (சிறிய பானை) சுண்ணாம்பு தடவி அதில் விழும் பதநீரை சேகரிக்க வேண்டும்.

ஒருநாள் செய்யத்தவறினாலும் மறுநாள் முதல் பதநீரின் அளவு தானாகவே குறைய தொடங்கிவிடும்.

பெண்கள் அடுப்பில் இரும்பு சட்டியில் பதநீரை ஊற்றி காய்ச்சுவார்கள். இதில் இளகிய பருவத்தில் இறக்கி வைத்து, தேங்காய் சிரட்டைகளில் ஊற்றி குளிர வைத்து, கருப்பட்டியாக்குகின்றனர்.

உரியவிலை கிடைக்கவில்லை

கருப்பட்டி உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் சத்திரம் பகுதியை சேர்ந்த முருகன் மனைவி ராணி மற்றும் அப்பகுதியை சேர்ந்த பனை தொழிலாளர்கள் சிலர் கூறியதாவது:-

தை முதல் ஆவணி மாதம் வரை 6 மாதத்திற்கு மட்டுமே பதநீர் இறக்க முடியும். சுமார் 60 லிட்டர் பதநீரை 2 மணி நேரம் நெருப்பில் காய்ச்சினால் 7 கிலோ கருப்பட்டிதான் கிடைக்கும். ஒரு கிலோ கருப்பட்டியை எங்களிடம் ரூ.150-க்கு வாங்கும் வியாபாரிகள் வெளி மார்க்கெட்டில் ரூ.250 வரை விற்பனை செய்கின்றனர்.

கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.300 வரை எங்களிடம் வாங்கிச்சென்றார்கள். ஆனால் இந்த ஆண்டு கோடை மழையால் கருப்பட்டி தெளிவில்லை என்று கூறி வியாபாரிகள் விலையை குறைத்து விட்டனர். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து சீனிப்பாகு மூலம் பலர் கருப்பட்டி தயார் செய்து ஆங்காங்கே விற்பனை செய்கின்றனர்.

இதனால் அசல் கருப்பட்டிகளையும் பொதுமக்கள் சந்தேகத்துடன் பார்க்கின்றனர். விலையையும் குறைத்து கேட்கின்றனர். கஷ்டப்பட்டு பனை ஏறும் தொழிலாளர்களுக்கு கட்டுப்படியான வருமானம் இல்லாததால், பனை ஏறும் தொழிலுக்கு பலர் வருவதில்லை. அரசு கருப்பட்டியை நேரடியாக கொள்முதல் செய்து, உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story