அமைச்சர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் முன்பு கருப்பு கொடியை ஏற்றிய பொதுமக்கள் பெண்ணாடம் அருகே பரபரப்பு
அமைச்சர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் முன்பு பொதுமக்கள் கருப்பு கொடி ஏற்றினா்.
பெண்ணாடம்,
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சி 2-வது வார்டு திருமலை அகரம் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டத்தின் கீழ் குடிசை மாற்று வாரியம் மூலம் 100 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது. ௩
இங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டினால் பெண்ணாடம் பகுதிக்குட்பட்ட பயனாளிகள் பலர் இங்கு வசிக்கும் நிலை ஏற்படும். ஆகவே மேற்கண்ட குடியிருப்பு கட்ட எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், இதுபற்றி மாவட்ட நிர்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும் மனு அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட உள்ள இடத்தை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், குறுசிறு மற்றும் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் பார்வையிட வருவதாக நேற்று காலை அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது.
இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் அமைச்சர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது வீடுகள் முன்பு கருப்புக்கொடியை ஏற்றினர். இதுபற்றி தகவல் அறிந்த அமைச்சர்கள் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட உள்ள இடத்தை பார்வையிடும் நிகழ்ச்சியை ரத்தி செய்து விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.