எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்க பா.ஜனதா திட்டம் -முத்தரசன் குற்றச்சாட்டு


எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்க பா.ஜனதா திட்டம் -முத்தரசன் குற்றச்சாட்டு
x

ராகுல்காந்தி மீதான நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்க பா.ஜனதா திட்டமிட்டு செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சி,

பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை ஒரு புதிய பொதுத்துறை நிறுவனத்தையும் உருவாக்கவில்லை. அதற்கு பதிலாக 23 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்துள்ளார். அதானி, அம்பானி குடும்பத்துக்கு மிகுந்த விசுவாசியாக மோடி செயல்படுகிறார். அதானி பிரச்சினைக்காக நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைக்கும் சம்பவம் இந்தியாவில் தான் நடக்கிறது.

அதானி கடன்களை மத்திய அரசு எப்படி தள்ளுபடி செய்கிறதோ, அதேபோல் மாணவர்களின் கல்வி கடனையும் மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும். ஒரேநாடு, ஒரே கட்சி என்ற சர்வாதிகார போக்கை கையாளும்வகையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்க திட்டமிட்டு ராகுல்காந்தி மீதான அடக்குமுறையை முன்னெடுத்துள்ளது.

கொள்கைக்கான கூட்டணி

பா.ஜ.க.வை விரைவில் அகற்றுவதே எங்களின் நோக்கம். அ.தி.மு.க.வை அடிப்படையாக கொண்டு தமிழகத்துக்குள் பா.ஜ.க. நுழைய முயற்சித்து வருகிறது. அதற்கு இடம் கொடுத்ததும் அ.தி.மு.க. தான். பா.ஜ.க. சொல்வதை அ.தி.மு.க. செய்வதால் அவர்கள் கூட்டணி தொடர்ந்து நீடித்து வருகிறது.

ஆனால் எங்களுடைய கூட்டணி கொள்கைக்கான கூட்டணி. இப்போது எந்த நிலையில் இருக்கிறமோ, அதே இடத்தில் தொடர்ந்து நீடிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story