தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் வலிமையான கூட்டணி அமையும் - அண்ணாமலை பேட்டி
பா.ஜ.க கூட்டணியில் த.மா.கா இணைந்ததை அடுத்து, அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசனை நேரில் சந்தித்தார் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை.
சென்னை,
மக்களவைத் தேர்தல் தொடர்பாக பா.ஜ.க மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு இடையே நேற்று கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. நேற்று ஜி.கே வாசனை பா.ஜ.க தேர்தல் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் சந்தித்து பேசி இருந்தார். இந்த பேச்சுவார்த்தை ஜி.கே வாசன் இல்லத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே வாசன், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்து செயல்பட உள்ளது என தெரிவித்தார்.
இந்தநிலையில், சென்னையில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனை தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தார். கூட்டணியில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து வாழ்த்திய பிறகு,தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு என தனிப்பெருமை ஒன்று உள்ளது. பிரதமர் மோடியை விட்டு வாசன் எங்கேயும் சென்றதில்லை. தமிழ்நாட்டில் ஆரம்பத்தில் இருந்து மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் ஜி.கே.வாசன்.
ஜி.கே.வாசனிடம் நான் எப்போதும் அரசியல் ஆலோசனைகள் பெறுவது உண்டு. பா.ஜ.க.கூட்டணியில் முதல் ஆளாக வந்திருக்கிறார். அடுத்த 100 நாட்களுக்கு எங்களை வழிநடத்தக்கூடிய நபராக ஜி.கே.வாசன் இருக்கப்போகிறார். எல்லோருடனும் இணைந்து வளமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கம்.
பா.ஜ.க. அரசின் சாதனைகளை பட்டியலிட்டு வாக்குகளை கேட்க உள்ளோம். பிற கூட்டணிகளின் பலவீனம் பற்றி கவலையில்லை. எங்கள் கூட்டணியை வலுப்படுத்துவதே நோக்கம். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் வலிமையான கூட்டணி அமையும். தி.மு.க.வால் அவர்கள் செய்த சாதனையை சொல்லி வாக்கு கேட்க முடியவில்லை. அதனால் அவர்கள் எங்களை விமர்சிக்கிறார்கள் என்றார்.
பா.ஜ.க. கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை த.மா.கா கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.