இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட முயற்சி
அமைச்சர் சேகர்பாபு பதவி விலகக்கோரி கரூரில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை போராட்டம்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசினார். இந்த கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை கண்டித்து இந்து அமைப்புகள் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை கண்டித்தும், அந்த மாநாட்டில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலகக்கோரியும் கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் நேற்று கரூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.
வாக்குவாதம்
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரூர் வெங்கமேடு மேம்பாலம் அருகே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கரூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் செந்தில்நாதன் தலைமையில் பா.ஜ.க.வினரும் அப்பகுதியில் குவிந்தனர். அப்போது அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபுவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து, போலீஸ் வேனில் ஏற்றினர். அப்போது பா.ஜ.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
91 பேர் கைது
இதனையடுத்து பா.ஜ.க.வினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பா.ஜ.க.வினரை போலீசார் வலுகட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றினர். போராட்டத்தில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 91 பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.