மதுரையில் போலி பாஸ்போர்ட் விவகாரம்: கவர்னரிடம் 21-ந் தேதி புகார் அளிப்போம்- அண்ணாமலை


மதுரையில் போலி பாஸ்போர்ட் விவகாரம்: கவர்னரிடம் 21-ந் தேதி புகார் அளிப்போம்- அண்ணாமலை
x

மதுரை போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக வருகிற 21-ந் தேதி கவர்னரிடம் புகார் அளிக்கப்போவதாக அண்ணாமலை தெரிவித்தார்.

நடமாடும் வாகன சேவை

கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. சார்பில் நமக்காக நம்ம எம்.எல்.ஏ. என்ற தலைப்பில் மக்கள் குறைதீர்க்கும் நடமாடும் வாகன சேவை தொடக்க நிகழ்ச்சி கெம்பட்டிகாலனியில் நடைபெற்றது. இதை பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். இதில், டெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.


இதையடுத்து அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

போலி பாஸ்போர்ட்

மதுரை அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டது குறித்து ஆதாரப்பூர்வமாக புகார் அளிக்க உள்ளோம். இதுதொடர்பாக மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக வருகிற 21-ந் தேதி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளோம்.

முதல்-அமைச்சர் தேச பாதுகாப்போடு விளையாட வேண்டாம். இந்த விவகாரத்தில் இதுவரை ஒரு சார்ஜ் மெமோ கூட கொடுக்க வில்லை. எந்த ஆட்சியில் நடந்து இருந்தாலும் முதல்-அமைச்சர் முன்னுதாரணமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடப்பது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை. இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி கலந்து கொள்ள சாத்தியம் அதிகமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரமாண்டமாக நடத்த வேண்டும்.

கல்லூரிக்குள் அரசியல்

திருப்பூர் கல்லூரிகளில் 'செல்பி வித் அண்ணா' நிகழ்ச்சிக்கு மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தது குறித்து கேள்விப்பட்டதும் கல்லூரிகளுக்கு முன்பு அனுமதியில்லாமல் செல்வதை தவிர்க்க வேண்டும் என தொண்டர்களிடம் கூறி உள்ளேன். கல்லூரிக்குள் அரசியல் வேண்டாம் என்பது தான் எனது நிலைப்பாடு.

அ.தி.மு.க. உட்கட்சி விசயத்தில் பா.ஜ.க. நுழையாது. பா.ஜ.க., அ.தி.மு.க. உறவு தொடர்கிறது. அ.தி.மு.க. தலைமையை முடிவு செய்யும் அதிகாரம் அக்கட்சியின் தொண்டர்களுக்கும், நிர்வாகி களுக்கும் தான் உண்டு. தலைமை விவகாரத்தில் அக்கட்சியினரின் முடிவை பா.ஜ.க. ஏற்றுக் கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story