பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அடையாளம் தெரிந்தது
சென்னையில் பா.ஜ.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 3 குற்றவாளிகள் அடையாளம் தெரிந்தது. அவர்களை கைது செய்ய 7 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை,
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு பா.ஜ.க. பிரமுகர் பாலச்சந்தர் (வயது 30) நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 3 பேர் அடங்கிய கொலை வெறிக்கும்பல் இந்த படுபாதக செயலில் ஈடுபட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். பாலச்சந்தரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவரது உடல் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அவருடைய பூர்வீக வீட்டில் வைக்கப்பட்டது. பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று பாலச்சந்தரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். இன்று (வியாழக்கிழமை) இறுதிச்சடங்குகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
3 கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது
கொலை நடந்தவுடன் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் கமிஷனர் அன்பு ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். கொலையாளிகளை பிடிக்க துணை கமிஷனர் பகலவன், உதவி கமிஷனர் ரகுபதி ஆகியோர் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடிவருகிறார்கள்.
இந்த படுகொலை தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தனிப்பட்ட விரோதம் காரணமாக பாலச்சந்தர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்த குற்றவாளிகள், கொலைச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பிரதீப் (22), சஞ்சய் (20) மற்றும் கலைவாணன் என்று தெரியவந்துள்ளது. பிரதீப், சஞ்சய் இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள். இருவரும் ரவுடிகள். பிரதீப் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர்களது தந்தை தர்கா மோகனும் ரவுடி ஆவார்.
கொலை செய்ய காரணம்
தர்கா மோகனும், அவரது மருமகனும் சமீபத்தில் பெண் ஒருவரின் வீட்டை அபகரிக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதற்கு காரணம் பாலச்சந்தர்தான் என்று கொலையாளி பிரதீப் நம்பினார். மேலும் பிரதீப் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் மாமூல் வசூலிப்பதற்கு பாலச்சந்தர் தடையாக நின்றார். பிரதீப்பையும் போலீசில் மாட்டிவிட்டுள்ளார். எனவே பாலச்சந்தரை தீர்த்துக்கட்ட பிரதீப் தனது தம்பி சஞ்சய், நண்பன் கலைவாணன் ஆகியோருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி செயல்படுத்தி உள்ளார்.
பாலச்சந்தர் மீதும் 2 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாலச்சந்தர் தனது மனைவி, குழந்தையுடன் கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் வாழ்ந்து வந்தார். சிந்தாதிரிப்பேட்டையில் அவரது தாயார் வசிக்கிறார். தாயாரை பார்ப்பதற்கு பாலச்சந்தர் சிந்தாதிரிப்பேட்டைக்கு தினமும் வருவார். அவ்வாறு வரும்போதுதான் கொலையாளிகள் தீர்த்துக்கட்டிவிட்டனர்.
பணியிடைநீக்கம்
பாலச்சந்தருக்கு கொலை மிரட்டல் இருந்ததால், துப்பாக்கி ஏந்திய 2 போலீஸ் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். கொலைச் சம்பவம் நடந்தபோது பாலமுருகன் என்ற போலீஸ்காரர் பாலச்சந்தருடன் காவல் பணியில் இருந்தார். அவரை டீக்கடை ஒன்றில் உட்கார வைத்துவிட்டு பாலச்சந்தர் பல் வலிக்காக டாக்டர் ஒருவரை பார்க்கச் சென்றுள்ளார். டாக்டரை பார்த்துவிட்டு வரும்போதுதான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாலச்சந்தரை தனியாக விட்ட குற்றத்துக்காக, பாதுகாவல் பணியில் இருந்த போலீஸ்காரர் பாலமுருகன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.