நகராட்சி ஆணையாளர் காரை வழிமறித்து பா.ஜ.க.வினர் போராட்டம்
கடையநல்லூரில் நகராட்சி ஆணையாளர் காரை வழிமறித்து பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சியில் கடந்த ஜனவரி மாதம் நடந்த சாதாரண கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப் படத்தை வைக்க வேண்டும் என பா.ஜ.க. கவுன்சிலர்கள் தீர்மானம் கொண்டு வந்தனர். அதன்படி பிரதமர் படம் வைப்பது குறித்து தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில் நேற்று கூட்டம் முடிந்ததும் பிரதமர் படத்தை பா.ஜ.க. கவுன்சிலர்கள் சங்கரநாராயணன், மகேஸ்வரி, நகர தலைவர் சுப்பிரமணியன், பாலீஸ்வரன் உள்ளிட்டோர் கூட்ட அரங்கில் வைத்தனர். அப்போது மற்ற கவுன்சிலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்
அதனை தொடர்ந்து கூட்டரங்கில் இருந்த மோடியின் படம் திடீரென அகற்றப்பட்டதாக அறிந்து நகராட்சி அலுவலகத்திற்கு பா.ஜ.க. நிர்வாகிகள் திரண்டு வந்தனர். அப்போது பணி முடிந்து வெளியே வந்த நகராட்சி ஆணையாளரின் காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி, நகராட்சி ஆணையாளர் சுகந்தியை அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.