கரூர் மாவட்டத்தில் 200 இடங்களில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
தி.மு.க. அரசை கண்டித்து கரூர் மாவட்டத்தில் 200 இடங்களில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
கரூர் மேற்கு மாநகரம் பா.ஜ.க. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலுச்சாமிபுரத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட உள்ளாட்சி பிரிவு தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார்.
மேற்கு மாநகர பொதுச்செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. கரூர் மாவட்ட தலைவர் வி.வி. செந்தில்நாதன் கலந்து கொண்டு பேசினார். இதில், மாவட்ட பொதுச்செயலாளர் சக்திவேல் முருகன், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
10 அம்ச கோரிக்கை
குடும்ப அட்டை உள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை ரூ.ஆயிரம் வழங்க வேண்டும், தி.மு.க. அரசு பதவி ஏற்ற காலத்தில் இருந்து இதுவரை தராமல் இருக்கும் மகளிர் உரிமைத் தொகையை சேர்த்து வழங்க வேண்டும், மாதம் தோறும் மின்சார அளவீட்டினை கணக்கீடு செய்ய வேண்டும், மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், காவிரி ஆற்றில் நடைபெறும் சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமான மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல் கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் அனைத்து நகர, வார்டு, கிராம பஞ்சாயத்து, ஊராட்சி அளவில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நொய்யல்-அரவக்குறிச்சி
கரூர் மேற்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் தளவாபாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் நல்லசிவம் தலைமை தாங்கினார். கரூர் மேற்கு ஒன்றிய பார்வையாளர் டாக்டர் அரவிந்த் கார்த்திக் தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பேசினார். இதில், கரூர் ஒன்றிய பொது செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் அண்ணாநகரில் ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் தலைமையிலும், மலைக்கோவிலூரில் கிழக்கு ஒன்றிய தலைவர் சங்கர் கணேஷ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.