பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

போலீசாரை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் திங்கள் சந்தையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி

திங்கள் சந்தை:

போலீசாரை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் திங்கள் சந்தையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்டத்தில் போலீசார் ஒரு தலை பட்சமாக நடந்து கொள்வதாகவும், அவர்களை கண்டித்தும் குமரி மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் திங்கள்சந்தை ராதாகிருஷ்ணன் கோவில் முன்பு நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு பா.ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

மாவட்ட தலைவர் தர்மராஜ் பேசும் போது, 'தேங்காப்பட்டணத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக புதுக்கடை போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். அதன் பிறகு 25-க்கும் மேற்பட்ட பா.ஜனதாவினர் வீடுகளுக்கு போலீசார் சென்று தேடி உள்ளனர். இது போன்ற போலீசாரின் ஒரு தலை பட்ச போக்கை பா.ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அப்பாவி பா.ஜனதா கட்சி பிரமுகரை தாக்கியவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

கோஷம்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இன்னொரு மதகலவரத்தை தூண்ட வேண்டாம், மதக்கலவரம் ஏற்பட்டால் அதற்கு போலீசாரே பொறுப்பு என கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், நிர்வாகிகள் சிவகுமார், கவுதம், குமரி ப.ரமேஷ், மனோகரகுமார் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

2 மணிநேரம் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தால் திங்கள்நகர் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதைத்தொடர்ந்து போலீசார் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பினர். குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில், இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story