தேர்தல் களத்தில் எதிர்ப்பு அலையால் மக்களை அச்சுறுத்தும் பா.ஜ.க. தலைவர்கள் - முத்தரசன் கண்டனம்


தேர்தல் களத்தில் எதிர்ப்பு அலையால் மக்களை அச்சுறுத்தும் பா.ஜ.க. தலைவர்கள் - முத்தரசன் கண்டனம்
x

பா.ஜ.க. மக்களின் நலன் குறித்து பேசுவதற்கு ஏதும் இல்லாமல், எதிர்கட்சிகள் மீது அப்பட்டமான பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றது என்று முத்தரசன் கூறியுள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் கடுமையான தோல்வியை சந்திக்க வேண்டிய நிலைக்கு பா.ஜ.க.வும், அதன் கூட்டணியும் தள்ளப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் வலிமை பெற்று மாபெரும் வெற்றி பெறுவது உறுதியாகி வருகின்றது. தேர்தல் களத்தில் எதிர்ப்பு அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கண்டு பிரதமர், உள்துறை மந்திரி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் மக்களை அச்சுறுத்தி வருகிறார்கள்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் பெரும் குழும நிறுவனங்களிடம் நன்கொடை வசூலித்ததில் பா.ஜ.க.வின் ஊழலும், முறைகேடும் நாடு முழுவதும் முடைநாற்றம் வீசி வருகிறது. அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தி ஜனநாயக அமைப்பு முறையை சிதைக்கும் செயலை உலக நாடுகள் விமர்சித்து வருகின்றன. மாநில மக்களின் உரிமைகளை பறித்து நாட்டின் ஒருமைப் பாட்டிற்கும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை துண்டாக்கி ஒற்றுமைக்கும் பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்தாண்டு கால ஆட்சியில் மக்கள் விரோத கொள்கைகளை செயல்படுத்தி அதானி, அம்பானி குழுமங்கள் உப்பிப் பெருக்க உதவி செய்து வந்த பா.ஜ.க. மக்களின் நலன் குறித்து பேசுவதற்கு ஏதும் இல்லாமல், எதிர்கட்சிகள் மீது அப்பட்டமான பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றது.

இந்த நிலையில் நாட்டின் பாரம்பரிய மரபுகளை பேணி பாதுகாக்கும் மாதர் குலத்தின் பிரதிநிதியாக விளங்கி வரும் அன்னை சோனியா மீது அவதூறு கூறி, இழிவு செய்வதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இந்தியா கூட்டணி வென்றால் நாட்டில் கலவரங்கள் அதிகரிக்கும் என உள்துறை மந்திரி பேசுவது மக்களையும், வாக்காளர்களையும் அச்சுறுத்தி, ஆதாயம் தேடும் மலிவான செயலாகும். பா.ஜ.க. தலைவர்களின் பொறுப்பற்ற, தரம் தாழ்த்த பேச்சுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story