வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்று மோடி ஆட்சி அமைப்பது உறுதி - மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேட்டி


வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்று மோடி ஆட்சி அமைப்பது உறுதி -  மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேட்டி
x
தினத்தந்தி 16 Oct 2023 3:03 PM IST (Updated: 16 Oct 2023 3:35 PM IST)
t-max-icont-min-icon

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்று மோடி ஆட்சி அமைப்பது உறுதி என்று சென்னிமலை முருகன் கோவிலுக்கு வந்த மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னிமலை,

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு துறை, பால் வளம், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணை மந்திரி எல்.முருகன் வந்தார். அவருக்கு கோவில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன் மற்றும் கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் வரவேற்பு அளித்தனர். மூலவர் சன்னதிக்கு சென்று எல்.முருகன் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த இணை மந்திரி எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட இடம் சென்னிமலை முருகன் கோவில் ஆகும். 2 ஆண்டுகளுக்கு முன்பு கந்த சஷ்டி கவசத்தை அவமரியாதை செய்தார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மிகப்பெரிய வெற்றிவேல் யாத்திரையை நடத்தியதால் கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது சென்னிமலை முருகன் கோவில் மீது மீண்டும் ஒரு தாக்குதல் நடந்துள்ளது. இதனை தமிழக அரசு, அவர்கள் மீது முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத காரணத்தால் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

சனாதனத்தை ஒழிப்போம் என்று தற்போது மகாராஜாக்கள், இளவரசர்கள் பேசி வருகிறார்கள். இந்த தேசத்தின் மிகப்பெரிய முன்னேற்றத்திற்கு காரணம் சனாதனம்தான்.

2014 ஆண்டுக்கு முன்பு தினந்தோறும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. மோடி பிரதமர் ஆன பிறகு ஒரு மீனவர்கள் மீது கூட துப்பாக்கி சூடு நடைபெறவில்லை. மீனவர்கள் எல்லை தாண்டி போகும் போது மட்டும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெறுகின்றன.

குஜராத் மாடல் என்பது அங்கு அமுல் நிறுவனத்தில் பால் விவசாயிகளுக்கு லாபத்தில் பங்கு தருகிறார்கள். ஆனால் தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு துரோகம் செய்கிறது.

அமலாக்கத்துறையினர் மற்றும் வருமானவரித்துறையினர் அவர்களுக்கு கிடைக்கும் தகவல் அடிப்படையில் சோதனை நடத்துகின்றனர். தற்போது நீலகிரி எம்.பி ஆ.ராசாவின் 15 சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. இது மக்களின் பணம்.

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தொகுதி மறு சீரமைப்பிற்கு பின்னர் 2029 ஆண்டு நடைமுறை படுத்தப்படும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று 3-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்பார். இவ்வாறு இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.


Next Story