'தமிழகத்தில் பா.ஜனதா வலிமையாக வளர்ந்து வருகிறது'


தமிழகத்தில் பா.ஜனதா வலிமையாக வளர்ந்து வருகிறது
x

தமிழகத்தில் பா.ஜனதா வலிமையாக வளர்ந்து வருகிறது என்று மத்திய மந்திரி டாக்டர் விஜயகுமார் சிங் தெரிவித்தார்.

சிவகங்கை

தமிழகத்தில் பா.ஜனதா வலிமையாக வளர்ந்து வருகிறது என்று மத்திய மந்திரி டாக்டர் விஜயகுமார் சிங் தெரிவித்தார்.

ஆய்வு கூட்டம்

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி டாக்டர் விஜயகுமார் சிங் நேற்று சிவகங்கை வந்தார். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அவரை கலெக்டர் மதுசூதன்ரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து, அவர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

கூட்டத்தில் மாவட்டவருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சிவராமன், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர்கள் .பாண்டியன் (காரைக்குடி),நாகராஜன் (மதுரை) உள்பட அனைத்துத்துறைகளைச் சார்ந்த முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வளர்ச்சி பாதை

கூட்டத்தில் மத்திய மந்திரி கூறியதாவது:-

இந்தியாவில் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி அறிவித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அவர் இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் வழிநடத்தி வருகிறார். அதன்மூலம் தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவைகளில் சிறந்து விளங்கும் நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது.

மத்திய, மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்திட்டங்களின் பயன்கள் முழுமையாக மக்களுக்கு சென்றடையும் பொருட்டு, சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது, ஒவ்வொரு துறையைச் சார்ந்த அலுவலர்களின் கடமையாகும். தகுதியான பயனாளிகளுக்கு உரிய பயன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதா வளர்ந்து வருகிறது

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

அரசின் சார்பில் நடைபெறும் திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் திட்டப் பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் டோல்கேட்டுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாகனங்களின் எண்கள் 6 மாதங்கள் கண்காணிக்கப்படும். அதன்பின் அடிக்கடி வரக்கூடிய வாகனங்களுக்கு கட்டணம் குறைக்கப்படும். தமிழகத்தில் பா.ஜ.க வலிமையாக வளர்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட தலைவர் மேப்பல்சக்தி, முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, கதளி நரசிங்க பெருமாள், சொக்கலிங்கம், நகர் தலைவர் உதயா, மாவட்ட துணைத்தலைவர் சுகவனேஸ்வரி, பொது செயலாளர்கள் நாகராஜன், மார்த்தாண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நரிக்குறவர் மக்களை சந்தித்தார்

பின்னர் அவர் சிவகங்கை பையூர் பிள்ளை வயல் பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனிக்கு சென்று அவர்களை சந்தித்து பேசினார். அப்போது அந்த மக்கள் அவரிடம் கோரிக்கைகளை தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து அவர் அதை மனுவாக எழுதி தரும்படி கூறினார். பின்னர் அவர்கள் மத்தியில் பேசும் போது பாரத பிரதமர் நரேந்திர மோடி தற்போது நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துள்ளார். இதனால் அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு போன்றவைகளில் கூடுதல் இட ஒதுக்கீடு கிடைக்கும் என கூறினார். பின்னர் அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில் மண்டல தலைவர் முத்து முனியாண்டி, ஓ.பி.சி. அணி மாநில செயற்குழு உறுப்பினர் நாகேஸ்வரன், தெற்கு ஒன்றிய துணைத்தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story