"பாஜக தன்னுடைய புதைக்குழியை, தோண்டிக்கொள்வதில் ஆர்வமாக உள்ளது"- கே.எஸ். அழகிரி பேட்டி


பாஜக தன்னுடைய புதைக்குழியை, தோண்டிக்கொள்வதில் ஆர்வமாக உள்ளது- கே.எஸ். அழகிரி பேட்டி
x

ராகுல் காந்தி எதையும் எதிர்கொள்ள தயாராக உள்ளார் என்று கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

சிதம்பரம்,

ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து சிதம்பரம் காந்திசிலை அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் அறவழி போராட்டம் இன்று நடந்தது. போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் கடலூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சித்தார்த்தன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார்.

அப்போது கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகா மாநிலத்தில் ராகுல் காந்தி பேசியது தொடர்பாக குஜராத்தில் ஒரு நபர் வழக்கு தொடர்ந்தார். வழக்கு தொடுத்தவரே இந்த வழக்கை நிறுத்தியநிலையில், பா.ஜ.க. அரசு நீதிபதியை மாற்றி புதிய நீதிபதியை நியமித்து இந்த வழக்கை புதுப்பித்து நீதியை வாங்கி உள்ளனர்.

பொதுவெளியில் ராகுல் காந்தி பேசினால் அதற்கு பிரதமர் பதில் அளிக்கவேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி உட்பட யார் பேசினாலும் அதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்பதாலும், இதனால் பல உண்மைகள் வெளிவரும் சூழல் உருவாகும் என்தாலும் ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில் நீதி வாங்கப்பட்டுள்ளது.

ஜனநாயக நாட்டில் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் பேசினால் அதற்கு ஆளும்கட்சி பதில் அளிக்க வேண்டும். ஆனால் எதிர்கட்சிகளை பேசவிடாமல் அடக்குமுறையை ஏவிவரும் மோடி அரசு எதிர்கட்சிகளின் குரல்வலையை நெரித்து வருகிறது. பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி 4 கேள்விகள் கேட்க வேண்டும் என்று இருந்தார்.

பாஜக தன்னுடைய புதைக்குழியை, தோண்டிக்கொள்வதில் ஆர்வமாக உள்ளது. இந்த நாடு ஜனநாயக நாடு. பேச்சு உரிமை, எழுத்து உரிமை, கருத்து உரிமை உள்ள நாடு. எந்தவொரு தவறனா விஷயத்தையும் ராகுல் காந்தி சொல்லவில்லை. உண்மைக்கு புறம்பான விஷயங்களை அவர் (ராகுல் காந்தி) சொல்லவில்லை.

ராகுல் காந்தி சிறு குழந்தை அல்ல, விளையாட்டுப் பிள்ளை அல்ல. வாழ்க்கையில் பலவற்றை துறந்து இந்த அரசியலுக்கு வந்துள்ளார். ராகுல் காந்தி எதையும் எதிர்கொள்ள தயாராக உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story