பா.ஜ.க. நிர்வாகிக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்த கோர்ட்டு உத்தரவு முறையாக பின்பற்றப்பட்டு உள்ளதா? -போலீசார் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பா.ஜ.க. நிர்வாகிக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்த கோர்ட்டு உத்தரவு முறையாக பின்பற்றப்பட்டு உள்ளதா? என்பது குறித்து போலீசார் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பா.ஜ.க. நிர்வாகிக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்த கோர்ட்டு உத்தரவு முறையாக பின்பற்றப்பட்டு உள்ளதா? என்பது குறித்து போலீசார் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு
மதுரை மாவட்ட பா.ஜ.க. தலைவராக மகா சுசீந்திரன் உள்ளார். இவர் தன்னுடைய உயிருக்கு மர்ம நபர்களால் அச்சுறுத்தல் உள்ளதால், 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது கோரிக்கையை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்தநிலையில் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை போலீசார் முறையாக பின்பற்றவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகா சுசீந்திரன், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அவமதிப்புக்கு உரியது
இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் நிரஞ்சன் குமார் ஆஜராகி, மனுதாரருடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு கேட்டு ஏற்கனவே வழக்கு தொடர்ந்தபோது, மனுதாரருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு விட்டது என்றனர். ஆனாலும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தொடர்ந்து பலமுறை முறையிட்டும் கோர்ட்டு உத்தரவை அதிகாரிகள் பின்பற்றாதது அவமதிப்புக்கு உரியதாகும் என்றார்.
அதற்கு அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரருக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்பதால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்றார்.
இதையடுத்து நீதிபதி, கோர்ட்டு உத்தரவு முறையாக பின்பற்றப்பட்டு உள்ளதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி, இந்த வழக்கு விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.