நெல்லையில் பா.ஜனதா நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை - தி.மு.க. பிரமுகரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியல்
நெல்லையில் பா.ஜனதா நிர்வாகி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய தி.மு.க. பிரமுகரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை பாளையங்கோட்டை மூளிக்குளத்தைச் சேர்ந்தவர் செல்லையா. இவருடைய மகன் ஜெகன் (வயது 34). நெல்லை மாநகர பா.ஜனதா இளைஞரணி செயலாளரான இவர் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வசித்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் இரவில் தனது ஸ்கூட்டரில் மூளிக்குளத்திற்கு வந்தார். பின்னர் அங்குள்ள கோவில் முன்பு வாய்க்கால் கரையோரம் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு நின்றார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் திடீரென்று ஜெகனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.
இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஜெகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று காலையில் மூளிக்குளம் பகுதியில் ஜெகனின் உறவினர்கள், ஆதரவாளர்கள், பா.ஜனதாவினர் திரண்டனர். அவர்கள், தி.மு.க. பிரமுகர் பிரபு தூண்டுதலின்பேரில்தான் ஜெகன் கொலை செய்யப்பட்டு உள்ளார். எனவே அவரையும், அவருடைய மனைவி, உறவினர் ஆகியோரையும் உடனே கைது செய்ய வேண்டும். அதுவரையிலும் ஜெகனின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி, வண்ணார்பேட்டையில் இருந்து பாளையங்கோட்டை மார்க்கெட் செல்லும் திருச்செந்தூர் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஜெகன் கொலை வழக்கு தொடர்பாக பாளையங்கோட்டை சமாதானபுரத்தைச் சேர்ந்த அனீஸ் (28), மூளிக்குளத்தை சேர்ந்த பாஸ்கர் (21), அன்பு மகன் சந்துரு (23), பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த அஜித் (20), ராஜாகுடியிருப்பைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஸ்வரன் (27), வசந்த் ஆகிய 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் தலைமறைவான தி.மு.க. பிரமுகர் பிரபு உள்ளிட்ட 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, ஜெகனின் ஆதரவாளர்கள் நேற்று மாலையில் பிரபுவின் பால்பண்ணையில் இருந்த நபரை தாக்கினர். மேலும் அங்கு கறந்து வைக்கப்பட்டு இருந்த 200 லிட்டர் பாலையும் தரையில் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.