'ரெய்டு' பயத்தால் தி.மு.க. ஊழல் குறித்து அ.தி.மு.க.வினர் பேச பயப்படுகின்றனர் வி.பி.துரைசாமி பேட்டி
தங்கள் மீது ரெய்டு வரும் என்ற பயத்தால் தி.மு.க. ஊழல் குறித்து அ.தி.மு.க.வினர் பேச பயப்படுகின்றனர் என வி.பி.துரைசாமி கூறினார்.
ராசிபுரம்:
தங்கள் மீது ரெய்டு வரும் என்ற பயத்தால் தி.மு.க. ஊழல் குறித்து அ.தி.மு.க.வினர் பேச பயப்படுகின்றனர் என வி.பி.துரைசாமி கூறினார்.
ஏற்றுக்கொள்ள முடியாது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மாநில பா.ஜனதா துணைத்தலைவர் வி.பி.துரைசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு மக்கள் நலத்திட்டங்களுக்கு உயர் முன்னுரிமை அளித்து செயல்படுத்தி வருகிறது. பா.ஜனதா-அ.தி.மு.க. இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை. தொடர்ந்து நண்பர்களாக உள்ளோம். காவிரி, முல்லை பெரியாறு, மேகதாது மற்றும் மொழி கொள்கை ஆகிய பிரச்சினைகளில் பா.ஜ.க. இரட்டை நிலைப்பாடு எடுக்கிறது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்தார். தொடர்ந்து அவர்களுக்காக போராடி வருகிறார். தமிழர்களின் மொழி உணர்வுக்கு பங்கம் வராமல் தன்னுடைய தலைமையிலான மாநில பா.ஜ.க.வை அவர் சிறப்பாக செயல்படுத்தி வரும் நிலையில் அவரது நிலைப்பாட்டை நாம் வரவேற்க வேண்டும்.
'ரெய்டு' பயம்
தமிழக சட்டசபையில் 65 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில் தி.மு.க.வின் ஊழல்கள் குறித்து சட்டசபையில் அவர்கள் பேச வேண்டும். தங்கள் மீது ரெய்டு வரும் என பயப்படுவதால் அவர்கள் பேசாமல் உள்ளனர். எனவே பா.ஜ.க.வை பற்றியோ, அதன் தலைவர்கள் பற்றியோ குறை கூற பொன்னையனுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது.
கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அண்ணாமலை எடுத்து வருகிறார். அதற்கு மத்திய அரசு உதவியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. தலைவர் சத்தியமூர்த்தி, பொது செயலாளர் சேதுராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹரிகரன், மாவட்ட துணைத்தலைவர் மகேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.