'தமிழகத்தில் பா.ஜ.க.வால் குதிரை பேரம் நடத்த முடியாது' - கி.வீரமணி அறிக்கை


தமிழகத்தில் பா.ஜ.க.வால் குதிரை பேரம் நடத்த முடியாது - கி.வீரமணி அறிக்கை
x

தமிழகத்தில் பா.ஜ.க.வால் குதிரை பேரம் நடத்த முடியாது என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்திற்கு 36 மத்திய மந்திரிகள் படை எடுக்கிறார்களாம். மத்திய மந்திரி ஒருவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டன என்பதுபோல பட்ஜெட்டில் சொன்னார். உடனே மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், மற்ற எதிர்க்கட்சியினரும் ஆதாரம் கேட்டதற்கு பதிலே இல்லை.

இதுவரை 16 மத்திய மந்திரிகள் வந்து ஆய்வு செய்து, தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியை ஏற்படுத்த முனைப்புடன் பிரசாரம் செய்துவிட்டார்களாம். அடுத்து மேலும் 36 மத்திய மந்திரிகள் தமிழகத்திற்கு தொடர்ந்து வந்து தாமரையை மலர வைக்கப் போகிறார்களாம். இது திராவிடக் கடல், சமூகநீதிக் கடல் இங்கு, ஒட்டுமொத்த மத்திய மந்திரிகளும் தமிழகத்திற்கு வந்து குடியேறினால்கூட, இந்த மண்ணை காவி மண்ணாக ஆக்கவோ, பா.ஜ.க. ஆட்சியை அமைக்கவோ முடியாது.

முதலில் தனித்து நின்று தமிழகத்தில் 5 இடங்களில் வென்று காட்டுங்கள் என்று சுப்பிரமணிய சாமி கேட்ட கேள்விக்கு பதில் கூறுங்கள். சில மாநிலங்களில் ஆளும் கட்சியில் 'குதிரை பேரம்' நடத்துவது போன்று, தமிழகத்தில் பா.ஜ.க.வால் குதிரை பேரம் நடத்த முடியாது. அதில் வெற்றி பெறவும் முடியாது என்பதைப் புரிந்து, ஜனநாயக முறையில் கட்சிப் பணியை நடத்துங்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story