ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை - அடுத்தடுத்து அதிரடி...!
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.
தேனி,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் கடந்த 24-ம் தேதி வயது முதிர்வு காரணமாக காலமானார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று நேரில் சந்தித்தார். தேனியில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டிற்கு நேரில் சென்ற அண்ணாமலை ஓபிஎஸ் தாயார் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி இரங்கல் தெரிவித்தார்.
இது தொடர்பாக அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், அண்ணன் ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் இல்லத்திற்கு சென்று, அவரது தாயார் பழனியம்மாள் அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தத்தையும் தெரிவித்து கொண்டேன். இந்த பேரிழப்பை தாங்கும் மன வலிமையை அண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெற இறைவனை வேண்டுகிறேன். தாயாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். ஓம் சாந்தி' என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தது குறித்து ஒவ்வொரு வினைக்கு எதிர்வினை உண்டு என்றும், பாஜகவை ஆட்சிக்கட்டிலில் அமரவைக்க வந்துள்ளேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மதுரை விமான நிலையத்தில் அண்ணாமலை பேசியதாவது:-
தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் அரசியல் களம் எப்படி இருந்தது என்றால் யாராவது திராவிட கட்சிகளில் இருந்து 4 பேர் பாஜகவை காப்பாற்றிவிடமாட்டார்களா? என்று திராவிட கட்சிகள் ஏங்கிக்கொண்டிருக்கும்.
இன்றைக்கு சில திராவிட கட்சிகளின் வளர்ச்சிக்கு பாஜக கட்சி தான் கண்முன்னே தெரிகிறது. பாஜக வளர்ந்து வருகிறது தலைவர்களை உருவாக்கிக்கொண்டிருக்கின்றோம். இவர்கள் வந்து காப்பாற்றி விட மாட்டார்களா? என்று... நீங்கள் சொல்லும் கட்சியை (அதிமுக) விடுங்கள் எல்லா கட்சியையும் கூறுகிறேன்.
யாராவது பாஜகவில் இருந்து அங்கு போகிறார்கள் என்றால் திராவிட கட்சிகளுக்கு பாஜக மீது ஒரு பாசம் வந்துள்ளது. இவர்கள் உள்ளே வந்து நமது கட்சியை வளர்க்கமாட்டார்களா என்று... அதை வரவேற்கிறேன். நல்லா செல்லுங்கள்... எல்லா கட்சியையும் வீழ்ச்சியடையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்... அந்த கட்சியை வளர்த்துவிடுங்கள்... அவ்வளவு தான்... யார் போனாலும் நான் கூறுவது ஒன்றே ஒன்றுதான்... அவர்களை வாழ்த்தி வழியனுப்புவது தான் நமது பண்பு. அதேநேரத்தில் புரிந்துகொள்ளவேண்டும் தேசிய கட்சி என்றால் இங்கு தலைவர்கள் இருக்கமாட்டார்கள் மேனேஜர்( மேலாளர்கள் ) தான் இருப்பார்கள் என்று எப்போதுமே ஒரு பாவனை இருக்கும். தேசிய கட்சிகள் என்றாலே மேனேஜர்தான். இதே பிராந்திய கட்சிகள், மாநில கட்சிகள், திராவிட கட்சிகள் என்றால் ஒரு குடும்பத்தை சார்ந்த தலைவர்கள் இருப்பார்கள். அசைக்க முடியாமல் 50 வருடம் அவர்களே இருப்பார்கள். அவர்களை நம்பி சென்றால் நம்மை பார்த்துக்கொள்வார்கள்.. அவர்களுக்கு பின்னாள் அவர்களின் பையன் நம்மை பார்த்துக்கொள்வார்கள் என்பது குறிப்பாக தென் இந்தியாவில் தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா இங்கே எல்லாம் குடும்ப கட்சிகள் அதிகம் உள்ளதால் ஒரே தலைவர் 10 வருடம், 20 வருடம், 30 வருடம் ஒரே தலைவர் இருப்பார்.
இத்தனை காலமாக தமிழ்நாடு அரசியல் களம் எப்படி இருந்தது என்றால் அந்த ஒரு தலைவரை நம்பி சென்றுவிட்டால் ஒரு 30 வருடம் நம்மோடு இருப்பார்கள்.
அண்ணாமலை இங்கு வந்து தோசை சுடவோ, இட்லி சுடவோ, சப்பாத்தி சுடவோ வரவில்லை. எப்போதும் எனது தலைமை பண்பு என்பது ஒரு மேனேஜர் போல இருக்காது. மேனேஜர் போன்று மேலாண்மை செய்துகொண்டு, தாஜா செய்துகொண்டு அப்படியே யாராவது கோபமாக இருந்தார்கள் என்றால் நள்ளிரவு சென்று ஒரு 'டி' கொடுத்து அவர்களை சமாதானபடுத்தி இன்னொரு பொறுப்பு கொடுத்து அப்படியல்ல... நான் தலைவன்... தலைவன் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி தான் நான் இருப்பேன்.
சில முடிவுகள் சிலபேருக்கு அதிர்ச்சி அளிக்கத்தான் செய்யும். அதையெல்லாம் கண்டுக்கொண்டு சென்றுகொண்டே இருக்க வேண்டும். அம்மா எடுக்காத முடிவுகளா? கலைஞர் ஐயா எடுக்காத முடிவுகளா? தமிழ்நாடு பார்க்காத ஆளுமையா? அது போன்று தான் நான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேனே தவிர நான் வந்து எப்போழுதும் ஒரு மேனேஜராக இருக்க வேண்டும். அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அப்போது, கட்சி சில அதிர்வுகளை சந்தித்துக்கொண்டு தான் இருக்கும். கட்சி அதிர்வுகளை சந்திக்கும்.
இன்னும் ஒரு 6 மாதம் கழித்து இன்னும் ஒரு 2 பேர் போகலாம். 4 பேர் வரலாம். இன்னும் ஒரு வருடம் கழித்து இது நடக்கலாம். ஏனென்றால் தலைவரை போல சில முடிவுகள் கட்சியின் நன்மைக்கு எடுக்க வேண்டுமென்றால் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் எடுப்பேன்.
டெல்லியில் நம்மை பற்றி இப்படி கூறிவிடுவார்களோ.. இவர்கள் கூறிவிடுவார்களா... இவர்கள் சென்று டெல்லியில் நம்மை பற்றி போட்டுக்கொடுத்துவிடுவார்களா... இதையெல்லாம் பார்த்தவன் நான். அதனால் இதற்கெல்லாம் கவலைப்படப்போவது கிடையாது. அதனால் பாஜக இருப்பை தக்க வைக்கும்வரை இந்த அதிர்வுகள் நடந்துகொண்டே தான் இருக்கும்.
பாஜகவை பொறுத்தவரை இங்கு நாங்கள் அனைவரும் சேர்ந்து செய்துகொண்டிருக்கக்கூடிய வேலை தலைவர்களாக அனைவரையும் மாற்றிக்கொண்டிருக்கிறோம். இது மாவட்ட தலைவருக்கும் பொருந்தும். ஏனென்றால் என்னையும் 3 வருடம் வைத்திருப்பார்கள் அதன் பின் என்னையும் மாற்றிவிடுவார்கள் நானும் மேனேஜர் தானே எப்படி அண்ணா நான் வந்து திராவிட கட்சிகளில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் 5 முறை எம்.எல்.ஏ., 10 முறை எம்.எல்.ஏ. , 3 முறை அமைச்சரை எதிர்த்து நான் வேலை செய்கிறேன்... என்னுடைய தலைவர்களுக்கும் அதே தான் கூறுகிறேன் நீங்கள் மாவட்ட தலைவர் என்றால் அப்படித்தான் இருக்கவேண்டும். உங்கள் பின்னால் கட்சி இருக்கும்.. நீங்கள் மேனேஜர் வேலை எங்கும் செய்யாதீர்கள் பாஜக தமிழ்நாட்டில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டுமென்றால் இந்த தேசிய கட்சிகளுக்கே உரித்தான இந்த மேனேஜர் என்ற பட்டத்தை உடைத்து தலைவர் இந்த கட்சியில் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை மக்களுக்கு கொடுத்தா தானாகவே அந்த கட்சிகள் சென்றுவிடும். அதை இப்போது செய்துகொண்டிருக்கின்றோம். சிலபேருக்கு அதிர்வுகள் ஆச்சரியங்கள் இருக்கலாம்.
அரசியலில் ஒரு ஒரு வினைக்கும் எதிர்வினை இருக்கத்தான் செய்யும். அது புவி ஈர்ப்பு. நியூட்டனின் 3-ம் விதி. இப்போது ஒரு வினை பார்ப்பீர்கள் எதிர்வினை இன்னும் 2 அல்லது 3 மாதம் கழித்து நடக்கும். அதன் பின் அங்கு ஒரு வினை இருக்கும் இங்கு ஒரு எதிர்வினை இருக்கும். இது கடந்து சென்றுக்கொண்டே தான் இருக்கும் அரசியல் கட்சி அப்படித்தான் வளர முடியும். குளம் அப்படியே நின்றுவிட்டது அதில் இருந்து தண்ணீர் வெளியே போகாது என்றால் சாக்கடையாக மாறிவிடும். என்னைபொறுத்தவரை பாஜக என்பது தெளிந்த நீரோடையாக ஓடிக்கொண்டிருக்க வேண்டும். தண்ணீர் ஓட ஆரம்பமாகியது என்றால் 4 பேர் வரவேண்டும்... 4 பேர் போக வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்த கட்சிக்கு வளர்ச்சியில்லை.
பாஜக தெளிந்த நீரோடையாக இருக்க வேண்டுமென்றது என்னுடைய ஆசை மட்டுமல்ல பிரதமர் மோடியின் ஆசை. பிரதமர் மோடியின் ஆசை மட்டுமல்ல டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள் அனைவரின் ஆசை.
தமிழ்நாட்டில் என்னைப்போன்று தாக்கப்பட்ட தலைவர் தமிழ்நாடு சரித்திரத்தில் யாருமே இல்லை... அதை நான் பெருமையாக கூறுகிறேன்.
அமித்ஷா கட்சியில் சேரும்போது கூறினார் தம்பி டர்புலென்ஸ் (விமான இறக்கை) எல்லாம் பார்த்துக்கொள்வாயா? என்று நான் கூறினே சார் எஞ்சினே கழன்று விழுந்தாலும் வண்டியை பறக்க விட்டுவிடுவேன் என்று... அதனால் இந்த டர்புலென்ஸ் எல்லாம் பார்க்க தயாராகத்தான் வந்துள்ளோம். டர்புலென்ஸ்க்கு எல்லாம் பயப்படப்போவது கிடையாது. அண்ணன் விஜயகாந்தை செய்தது போன்று அண்ணாமலையை செய்துவிடலாம் என்று... அதை எல்லாம் பார்த்து தான் வந்துள்ளோம்.
எஞ்சின் கழன்று விழுந்தாலும் இந்த வண்டியை மேலே எழுப்பவது எழுப்புவது (டேக் ஆப்) தான். இதற்கெல்லாம் பயப்படப்போவது கிடையாது. எல்லோருக்கும் நான் சொல்வது நல்லா இருங்கள்... எங்கு போனாலும் விசுவாசமாக இருங்கள். பாஜக சித்தாந்தம் யாரையும் தூக்கிப்பிடித்து வாழ்க வாழ்க என்று கோஷம் போடமாட்டோம். புது கட்சிக்கு சென்றுள்ளீர்கள் கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள். நான் இப்போதும் 3 வது கியர் தான்... வண்டி கியர் எல்லாம் குறையாது. 2026 இலக்கு என்றால் 5-வது கியரில் போக வேண்டும். இன்னும் 2 கியர் மாற்றவில்லை. அதற்கு நம் தொண்டர்கள் தலைவர்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் தயாரான பிறகு கியரை மாற்றிக்கொண்டு போய்க்கொண்டே இருப்போம்.
எந்த நிலையிலும் பாஜக வேகம் குறையாது. எந்த நிலையிலும் பாஜக தங்களை ஒரு ஜூனியர் கூட்டணியாக பார்க்கமாட்டோம். என் உடம்பில் ரத்தம் இருக்கும்வரை கூட்டணியில் இருந்தாலும் ஜூனியர் கூட்டாளி... படிந்து போக வேண்டும் என்பது அண்ணாமலை ரத்தத்திலேயே கிடையாது.
எங்கே இருந்தாலும் நேருக்கு நேர் பேசுகின்ற குணம் தான். நான் இருக்கும்வரை அப்படித்தான் இருக்கும். கஷ்டமாக இருந்தால் எல்லோரும் கிளம்பி செல்லுங்கள்.. அதன் இண்டிகோவில் ரூ.8 ஆயிரம் தானே டிக்கெட்... சென்று யார் யாரை பார்க்க வேண்டுமோ சென்று மாற்றிவிட்டு வரப்பாருங்கள். நான் இருக்கும்வரை மாற்றிக்கொள்ளமாட்டேன். பதவிக்காக இந்த உடம்பு இங்கு வரவில்லை. இந்த ரத்தம் என்பது ஒரு எம்.எல்.ஏ. , எம்.பி.ஐ வாங்கி பெயருக்கு பின்னால் எம்.எல்.ஏ., எம்பி. போட்டுக்கொள்ளலாம் என்று ஐபிஎஸ் பதவியையே தூக்கி வீசிவிட்டு வந்தவன் நான்.
எம்.பி., எம்.எல்.ஏ. என போட்டு என் பெயரை அழகுபடுத்திக்கொள்ள நான் இங்கு வரவில்லை. சி.எம் (முதல்-அமைச்சர்) என்று ஒரு வார்த்தையை போட்டுக்கொள்ளவும் இங்கு வரவில்லை. என்னை விட தகுதியானவர்கள் ஆயிரம் பேர் இங்கு உள்ளனர்.
நான் இங்கு வந்திருப்பது பாஜகவை ஆட்சிக்கட்டிலில் அமரவைப்பதற்காக வந்துள்ளேன். அதற்கு எவ்வளவு பெரிய சவாலையும் நான் பார்த்துக்கொள்கிறேன். அதனால் இந்த முதுகில் இன்னும் இடம் உள்ளது நிறைய குத்துங்கள். 2, 3 பேர் குத்திவிட்டுபோய்விட்டார்கள்.. இந்த முதுகு எதையும் தாங்கும். கத்தி பெரிய கத்தியாக வைத்து குத்துங்கள். சின்ன சின்ன கத்தியை வைத்து குத்தீர்கள் என்றால் கொசு கடிப்பது போல் இருக்கும்.
நான் இப்படித்தான் யாருக்கும் என்னை மாற்றிக்கொள்ளமாட்டேன். டெல்லியில் இருந்து யார் அழைத்து கூறினாலும் நான் மாற்றிக்கொள்ளமாட்டேன். நான் இப்படித்தான். இப்படி இருந்தால் மட்டும் தான் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியும் என்பது எனக்கு தெரியும்.
டெல்லியில் அழைத்து சொல்லி அப்படியே பத்து பதுசா மேனேஜர் போன்று மாறிக்கொண்டோம் என்றால் தமிழ்நாடில் தேசிய கட்சிகளுக்கு வேலையே இல்லை.
இங்கு ஆக்ரோஷம் மட்டும் தாம் தமிழ்நாட்டு மண்ணில் வேலை செய்யும். தமிழை முதன்மைபடுத்தி மட்டும் தான் இங்கு அரசியல் செய்ய முடியும். தமிழ்நாட்டு மக்களை மையப்படுத்தி தான் இங்கு அரசியல் இருக்க வேண்டும். அதை தவிர என்ன அரசியல் செய்தாலும் அது தோல்விதான். அதை முழுமையாக உணர்ந்தவன் நான். அதனால் வேகத்தில் குறைவிருக்காது. பேச்சில் கூட வரும் காலத்தில் காரம் அதிகமாக இருக்கும்.
30, 40 வருடத்தில் 140 தொண்டன் இறந்துள்ளான். அவனுக்காக இந்த கட்சியை வளர்க்க வேண்டும். நான் ஏதோ ஒரு எம்.பி., எம்.எல்.ஏ. வாங்குவதற்காக பத்து பசுசா பேசிவிட்டு அப்படியே சென்று அவ்வப்போது ஒரு மாலையை போட்டுவிட்டு ஒரு சால்வை போட்டுவிட்டு அண்ணே உங்களோடு நான் இருக்கிறேன் என்று கூற இங்கு வரவில்லை. அதை எல்லோருக்கும் புரியும்படி தெளிவாக கூறிக்கொள்கிறேன். என் அரசியல் இப்படித்தான் இருக்கும். வேண்டாம் என்றால் என்னை ஒதுக்கிவிட்டு அரசியல் செய்யுங்கள். நான் இருக்கும்வரை ஒரு சதவிகிதம் என் பேச்சு, எண்ணம் மாறாது' என்றார்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தனித்துப்போட்டியா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த அண்ணாமலை,
பண்ணுவோம்... இன்னும் நேரம் உள்ளது, இப்போது தான் வண்டி பயிற்சி பெற்றுள்ளது... எஞ்சின் சூடாகி உள்ளது.. டேக் ஆப் மோடில் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 13 மாதம் உள்ளது.. தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு 3 ஆண்டு உள்ளது. நேரம் வரும்போது எல்லாம் கூறுகிறேம். அவரசம் வேண்டாம். பொறுமையாக இருப்போம்.
புதுவிதமான அரசியல் வரவேண்டும்... புதுவிதமான அரசியல் கொண்டுவர பாஜகவால் மட்டும்தான் முடியும். அதற்கு நாங்கள் தயாராகிவிட்டோம்.
இப்போது பாஜகவில் இருந்து 2-ம் தர, 3-ம் தர, 4-ம் தர தலைவர்களை இழுத்து தான் கட்சியை வளர்க்கும் நிலைமை ஏன் சில கட்சிக்கு வந்தது.. கட்சி அப்படி ஆகிவிட்டது.... அரசியல் களத்தை பொறுத்தவரை நான் பேசிய பேச்சில் மாறமாட்டேன்.
யார் அழைத்து கூறியும் என்னை திருத்திக்கொள்ளமாட்டேன். தொண்டர்களுக்காக, இந்த கட்சிக்காக ஆட்சிக்கட்டிலிலே அமரவைக்கவேண்டிய கடமை எனக்கு உள்ளது. அதை செய்தே ஆக வேண்டும்' என்றார்.