பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி விட்டதா?


பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி விட்டதா?
x

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி விட்டதா?

நாகப்பட்டினம்

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி விட்டதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. எம்.பி.க்கு முத்தரசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

போட்டி அரசு

நாகை அருகே புத்தூர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாகையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு கூட்டம் நடந்தது. இதில் முக்கியமான தீர்மானங்கள் குறித்து விவாதம் நடந்தது. சமீபத்தில் நடந்த 6 சட்டசபை இடைதேர்தலில் 4-ல் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது. 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கிடைத்த வெற்றிதான் உண்மையான வெற்றி. சாதனைக்கு கிடைத்த வெற்றி என உண்மையை பிரதமர் மோடி மறைத்து விட்டு பேசுகிறார். அதேபோல் நாடு முழுவதும் பா.ஜ.க. ஆட்சியின் கீழ் இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். பா.ஜ.க. ஆட்சி அல்லாத மாநிலங்களில் மத்திய அரசு தங்களுக்கு சாதகமாக செயல்படும் கவர்னர்களை நியமித்து அரசுக்கு இடையூறு ஏற்படுத்தி போட்டி அரசை நடத்துகிறது.

போராட்டம்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி போட்டி அரசாங்கம் நடத்தவில்லை. மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக பேசுகிறார். இந்தியா இந்து மதத்தை சார்ந்த அரசு என பேசுகிறார்.

இவ்வாறு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசும் கவர்னரை மத்திய அரசு திரும்ப பெறக்கோரி வருகிற 29-ந்தேதி கவர்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பங்கேற்கிறார்.

விலையை குறைக்க வேண்டும்

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன், தி.மு.க கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். அப்படி என்றால் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க விலகி விட்டதா? என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு சுமை இல்லாமல் ஆவின் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில கட்டுப்பாட்டுக்குழுவை சேர்ந்த பாண்டியன், மாவட்ட செயலாளர் சிவகுருபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் சரபோஜி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story