பூங்காவுக்குள் புகுந்த காட்டெருமைகள்
கொடைக்கானலில் பூங்காவுக்குள் காட்டெருமைகள் புகுந்தன.
கொடைக்கானல் வனப்பகுதியில் இருந்து, நகருக்குள் காட்டெருமைகள் படையெடுப்பது வாடிக்கையாகி விட்டது. அதன்படி நேற்று மதியம் 1 மணி அளவில் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா பகுதியில் 3 காட்டெருமைகள் உலா வந்தன. அப்போது, அந்த பூங்காவை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து கொண்டிருந்தனர். காட்டெருமைகளை கண்ட அவர்கள் கலக்கம் அடைந்தனர். உயிர் பிழைக்க அலறி அடித்து ஓட்டம் பிடித்த அவர்கள், அருகே கடைகளுக்குள் புகுந்து அடைக்கலம் அடைந்தனர்.
இதேபோல் கொடைக்கானல் நகரவாசிகள் மற்றும் சாலையோர வியாபாரிகளும் காட்டெருமைகளை கண்டு அச்சம் அடைந்து ஓட்டம் பிடித்தனர். கம்பீர தோற்றத்துடன் காட்சி அளித்த காட்டெருமைகள், துளி அளவு கூட பயமின்றி அப்பகுதியில் ½ மணி நேரத்துக்கும் மேலாக வலம் வந்தன. அதன்பிறகு அருகே உள்ள அண்ணா பூங்காவுக்குள் காட்டெருமைகள் புகுந்தன. அங்கு முளைத்திருந்த புற்களை சாவகாசமாக மேயந்தன. இந்த காட்சியை சுற்றுலா பயணிகள் சிலர் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர்.
சிறிதுநேரம் கழித்து காட்டெருமைகள் தாமாகவே, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தின் வழியாக வனப்பகுதிக்குள் சென்று விட்டன. கதி கலங்க வைத்த காட்டெருமைகள், காணாமல் போன பிறகே சுற்றுலா பயணிகள் நிம்மதி அடைந்தனர். கொடைக்கானலில் அட்டகாசம் செய்து வரும் காட்டெருமைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.