பிரையண்ட் பூங்காவுக்குள் புகுந்த காட்டெருமைகள்
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவுக்குள் காட்டெருமைகள் புகுந்ததால் சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர்.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் வனப்பகுதியில், ஏராளமான காட்டெருமைகள் உள்ளன. இவை அவ்வப்போது நகர் பகுதிக்குள் உலா வருவது தொடர்கதையாக உள்ளது. கடந்த சில நாட்களாக வனப்பகுதியை விட்டு காட்டெருமைகள் வெளியேறி வருகின்றன. அவை விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதுடன், விவசாயிகளை அச்சுறுத்தி வருகின்றன. இதேபோல் கொடைக்கானல் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலா பகுதிகளிலும் காட்டெருமைகள் புகுந்து சுற்றுலா பயணிகளை கதிகலங்க வைப்பது வாடிக்கையாகி விட்டது.
இந்தநிலையில் நேற்று கொடைக்கானலின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான பிரையண்ட் பூங்காவுக்குள் 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக புகுந்தன. இதனை பார்த்த சுற்றுலா பயணிகள் அங்கிருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பூங்காவின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளதால், கடந்த 2 நாட்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் காட்டெருமைகள் சர்வசாதாரணமாக பூங்காவுக்குள் புகுந்து முகாமிட்டு வருகின்றன. எனவே காட்டெருமைகள் முகாமிடுவதை தடுக்க பூங்கா நிர்வாகம் கவனம் செலுத்தி, சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.