5 மாவட்டங்களுக்கு பறவைக்காய்ச்சல் அலார்ட்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
இதுகுறித்து, பொதுசுகாதாரத்துறை சார்பில் 5 மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ஆந்திர மாநிலம், நெல்லூரில் கடந்த 10 நாட்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் இறந்தாகவும், எச்.5.என்.1 இன்ப்ளூயன்ஸா வைரசால் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை உறுதி செய்துள்ளதாகத் நெல்லூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். எனவே, தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
ஆந்திர மாநிலத்தில், கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் மாவட்டத்துடன் நெருக்கமான ஒருங்கிணைப்பு மேற்கொள்ளவும், முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. எனவே, கால்நடை பராமரிப்புத் துறையின் கோரிக்கையின்படி, ஒவ்வொரு சோதனைச் சாவடிக்கும் டாக்டர்கள், பாரா மெடிக்கல் குழுக்களை நியமிக்க வேண்டும். பறவைகள் இறந்தால் அல்லது நோய்வாய்ப்பட்டால் களத்தில் உள்ள ஊழியர்கள் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.