ராமநத்தம் அருகே செல்லியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு மேலும் ஒரு கோவிலில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேருக்கு வலைவீச்சு


ராமநத்தம் அருகே செல்லியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு மேலும் ஒரு கோவிலில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 31 Aug 2023 12:15 AM IST (Updated: 31 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநத்தம் அருகே செல்லியம்மன் கோவிலில் உண்டியல் திருடுபோனது. மேலும் ஒரு கோவிலில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்

ராமநத்தம்,

ராமநத்தம் அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும், பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று காலையில் சாமி கும்பிடுவதற்காக பக்தர்கள் சிலர் கோவிலுக்கு சென்றனர். அப்போது கோவில் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது, கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை காணவில்லை.

மேலும் கோவிலின் அருகே உடைக்கப்பட்ட நிலையில் உண்டியல் கிடந்தது. ஆனால் அதில் காணிக்கை பணம் இல்லை. அதை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

மேலும் அங்குள்ள அய்யனார் கோவில் கதவின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் கோவிலில் எந்த பொருளும் திருடுபோகவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோவிலுக்குள் சென்று பார்த்து, அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அய்யனார் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவம்

அதில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் 2 பேர் கோவிலுக்குள் புகுந்துள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த சூலாயுதத்தை எடுத்து கோவிலில் இருந்த உண்டியலை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் உண்டியலை உடைக்க முடியவில்லை. இதையடுத்து சாமி சிலையில் ஏதேனும் நகைகள் உள்ளதா என பார்த்துள்ளனர். ஆனால் அதில் நகைகள் ஏதும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றிருப்பது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

தொடர்ந்து அவர்கள் அதே பகுதியில் உள்ள செல்லியம்மன் கோவில் உண்டியலை திருடிச்சென்றிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வலைவீச்சு

இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான அந்த 2 பேரின் உருவத்தை வைத்து அவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருவதுடன் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story